வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத நான்கு பொருட்கள்

தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. ஊட்டச்சத்து ஆலோசகர் நேஹா சஹாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 4 பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத நான்கு பொருட்கள்
Published on

காலை உணவு உடலுக்கு அவசியமானது. ஏனெனில் இரவு முழுவதும் ஓய்வில் இருக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை காலை உணவு வழங்கக்கூடியது. அதனை உட்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் முதல் உணவு உடலுக்கு ஊட்டமளிப்பதாக இருக்க வேண்டும்.

தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. ஊட்டச்சத்து ஆலோசகர் நேஹா சஹாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 4 பொருட்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவை குறித்து பார்ப்போம்.

எலுமிச்சை-தேன்: வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் என்று நம்புகிறார்கள். ஆனால் தேனில் அதிக கலோரிகள் உள்ளன. மேலும் சர்க்கரையை விட கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு அதில் அதிகமாக உள்ளடங்கி இருக்கிறது. அதற்கு காரணம் சுத்தமான தேனை கண்டுபிடிக்க முடியாததுதான்.

பெரும்பாலானவர்கள் தேன் என்ற பெயரில் சர்க்கரை மற்றும் அரிசி சிரப் கலந்த பானத்தை பருகு கிறார்கள். அது பார்ப்பதற்கு தேன் போலவே இருக்கும். அதனை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். எனவே சுத்தமான தேனை உட்கொள்வது நல்லது.

டீ-காபி: வெறும் வயிற்றில் டீ அல்லது காபி உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கக்கூடும். செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். காலையில் எழுந்ததும் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் வீரியம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் காபி உட்கொள்ளும்போது அதில் இருக்கும் காபின் ஹார்மோன் செயல்பாடுகளை தூண்டிவிடும். எனவே காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி மற்றும் பிற வகையான காபின் பானங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்ததும் வேறு ஏதாவது உணவு சிறிதளவு உட்கொண்டதும் டீ, காபி பருகலாம் என்பது சஹாயாவின் கருத்தாக இருக்கிறது.

பழங்கள்: சஹாயாவின் கருத்துபடி, மற்ற உணவுப் பொருட்களை ஒப்பிடும்போது பழங்கள் விரைவாக ஜீரணமாகும். அதனை சாப்பிட்ட சில மணி நேரத்திற்குள் பசியை உண்டாக்கும். சில சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சினைக்கு வழிவகுக்கும். காலையில் வேறு ஏதாவது உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடுவது சிறந்தது.

இனிப்பு உணவு: காலையில் வெறும் வயிற்றில் இனிப்பு பொருட்களை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்திவிடக்கூடும். விரைவாகவே பசியை தூண்டிவிடும். காலையில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பை அடிப்படையாக கொண்ட உணவை சாப்பிடுவது பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com