பளுதூக்கும் அழகி ஜூலியா வின்ஸ்

பவர் லிப்டிங் பயிற்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே, உள்ளூர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார் ஜூலியா. அதைத்தொடர்ந்து, உலக பவர்லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் சாதனை புரிந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, ‘உலக சாம்பியன்ஷிப் பட்டம்’ வென்றார்.
பளுதூக்கும் அழகி ஜூலியா வின்ஸ்
Published on

டுமையான உடற்பயிற்சிகள் செய்வதன் காரணமாக, முரட்டுத்தனமான உடல்வாகுடன் திகழும் பளுதூக்கும் வீராங்கனைகளுக்கு மத்தியில், மாடலிங் செய்யும் பெண் போன்ற நளினத்தோடு இருக்கிறார் ஜூலியா வின்ஸ். ரஷிய நாட்டைச் சேர்ந்த இவரை ரசிகர்கள் 'பார்பி கேர்ள்' என்றே செல்லமாக அழைக்கிறார்கள்.

சிறு வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த ஜூலியா, ஆர்வத்துடன் இசையும் கற்றுக் கொண்டார். பள்ளியில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளும் வாங்கியிருக்கிறார்.

இருந்தாலும் தன்னம்பிக்கை குறைந்தவராக விளங்கினார். அப்போது, அவரது பள்ளி ஜிம் பயிற்சியாளர், "தினமும் ஜிம்முக்கு வந்து பாடி பில்டிங்க் பயிற்சி செய். உன் உடல் பலம் பெறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்" என்று ஆலோசனை சொன்னார். அதன்படி ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார் ஜூலியா. நாளடைவில் ஜிம் பயிற்சிகளில் பளு தூக்குவதில் நாட்டம் அதிகரித்தது. ஆகையால், பிரத்தியேகமான பளுதூக்கும் பயிற்சிகள் செய்யத் தொடங்கினார்.

தற்போது பளுதூக்குவதில் பவர் லிப்டிங் பிரிவில் சாம்பியனாக விளங்கும் ஜூலியா, வாரத்தில் ஐந்து நாட்கள் பயிற்சிக் கூடம் சென்று கடுமையான பளுதூக்கும் பயிற்சிகளைச் செய்கிறார். டிரெட்மில் ஓட்டத்துடன் ஆரம்பிக்கும் இவரது தினசரி பயிற்சி, தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது.

பவர் லிப்டிங் பயிற்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே, உள்ளூர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார் ஜூலியா. அதைத்தொடர்ந்து, உலக பவர்லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் சாதனை புரிந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, 'உலக சாம்பியன்ஷிப் பட்டம்' வென்றார்.

பளுதூக்கும் பயிற்சி செய்பவர்களுக்கு திட்டமிட்ட, சத்தான உணவு அவசியம் என்பதால், கோழிக்கறி, முட்டையின் வெள்ளைக்கரு, மீன், அரிசி மற்றும் கோதுமை உணவு, தக்காளி, பால் பொருட்கள் மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பிடுகிறார்.

ஜூலியா தனது உடற்பயிற்சி தொடர்பான புகைப்படங்களையும், வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, உலக அளவில் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். அழகு, எனக்கு இயற்கையாக அமைந்த வரம்; அதை நான் பாதுகாக்க விரும்புகிறேன். அதே நேரம், பளுதூக்கும் உடற்பயிற்சி என்னைச் சாதனையாளராக்கி உள்ளது; உடல் பலத்தையும், மன பலத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. என்னை நான் விரும்புகிறேன்; எனக்குப் பிடித்தபடி வாழ ஆசைப்படுகிறேன்" என்று கூறுகிறார் ஜூலியா வின்ஸ். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com