உங்கள் உடம்புக்கு என்ன..?இதய நோய் சிகிச்சை நிபுணர் பதில் அளிக்கிறார்...!.

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார்.
உங்கள் உடம்புக்கு என்ன..?இதய நோய் சிகிச்சை நிபுணர் பதில் அளிக்கிறார்...!.
Published on

சென்னை,

கேள்வி: மனிதத்தின் உயிர் இதயத்தில் தான் இருக்கிறதா? (த. சத்தியநாராயணன், அயன்புரம்)

பதில்: தாயின் கருவில் வளரும் குழந்தைக்கு முதன்முதலாக இயங்க ஆரம்பிக்கும் உறுப்பு இதயம் தான். அதே போல், ஒரு மனிதன் இறக்கும்போது கடைசியாக இயங்குவதை நிறுத்திக்கொள்ளும் உறுப்பும் இதயம் தான். ஒருவரின் இதயத்துடிப்பு நின்ற பின்பு தான், அம்மனிதனின் இறப்பு உறுதி செய்யப்படுகிறது. இதை வைத்து, அறிவியல் ரீதியாக பார்க்கும்போது இதயம் தான் நம் உடலின் உயிர் ஊற்றாக அமைகிறது. ஒரு மனிதனின் எல்லா உணர்ச்சிகளும் இதயத்தை மையப்படுத்தி நெஞ்சை சுற்றியே நிகழ்கின்றன. உதாரணமாக, நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், கோபப்பட்டாலும், நம் நெஞ்சில் வெவ்வேறு பரிமாணங்களில் உணர்வுகள் ஏற்படுகின்றன. எனவே தான், மற்ற உறுப்புகளை விட இதயமே முக்கியத்துவம் பெறுகிறது.

 கேள்வி: இதய நோயால் இதய பலவீனம் உள்ளவர்கள் நீராகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறப்படுகிறதே, உண்மையா? (வின்னன், அம்பத்தூர்)

பதில்: இதய செயல்பாடு குறைவாக உள்ளவர்கள் நீராகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது முற்றிலும் உண்மையே. நம் உடல் அமைப்பில் 60 சதவீதம் நீரும், நம் ரத்தத்தில் 90 சதவீதம் நீரும் உள்ளது. நீராகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஒருவரின் ரத்தத்தின் கன அளவு விரிவடைகிறது. இவ்வாறு இருக்கையில் ரத்தத்தை உடல் முழுவதும் உந்தித்தள்ளும் இயந்திரமான இதயம் அதிகமாக செயல்படநேரிடுகிறது. ஏற்கனவே பலவீனமான இதயம் தொடர்ந்து அதிகமாக செயல்பட நேருமானால், அது மேலும் பலவீனம் அடைகிறது. இதனால் இதயம் பலவீன மாக உள்ளவர்கள் அதிக நீராகாரம் எடுத்துக்கொள்கையில் மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. இதை தவிர்க்க, இதய பலவீனம் உள்ளவர்கள் நீராகாரம் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கேள்வி: சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் ஏற்படும் என்று கூறுகிறார்களே, உண்மையா? (சசிரேகா, கிண்டி)

பதில்: ஆம். சொந்தத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய் மட்டுமல்லாமல் பல்வேறு உடல் உறுப்பு குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்தத்தில் திருமணம் செய்யும்போது மரபணு திரிதல் மற்றும் குரோமோசோம் குறைபாடு போன்ற காரணங்களால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் உறுப்பு குறைபாடு ஏற்படுகிறது. ஒருவேளை அவ்வாறு சொந்தத்தில் திருமணம் செய்பவர்கள் கர்ப்ப காலத்திலேயே பிரத்தியேக பரிசோதனைகளை மேற்கொண்டு கருவின் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்றவாறு வைத்தியம் செய்துகொள்ள முடியும்.

 கேள்வி: இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள் கீரை வகை உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது உண்மையா? (ராம், தருமபுரி)

பதில்: இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகளை ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய மருந்துகள் உடலில் பொருத்தப்பட்ட செயற்கை வால்வு நன்றாக செயல்பட உதவுகிறது. கீரைகளில் அதிகம் இருக்கும் வைட்டமின் கே எனும் ஊட்டச்சத்து மேற்கூறிய மருந்தின் செயல்திறனை மட்டுப்படுத்துகிறது. இதனால், செயற்கை வால்வு பழுதடைய வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகையால், இதய செயற்கை வால்வு பொருத்தப்பட்ட நோயாளிகள் கீரை வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கேள்வி: மாத்திரை போடாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? (சுசீலா, சென்னை)

பதில்: ரத்த அழுத்தம் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் (உப்பு குறைவாக சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, தினமும் மணிநேரம் நடைப்பயிற்சி, நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது) மாத்திரை இன்றி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால், நாள்பட்ட அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது நன்மை பயக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவர் அனுமதியின்றி ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரையை நிறுத்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

கேள்வி: பெண்களின் இதயத்திற்கும், ஆண்களின் இதயத்திற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? (ஆர்.ஆண் டனி,விருதுநகர்)

பதில்: ஆம். பெண்ணின் இதயத்திற்கும், ஆணின் இதயத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் 20 சதவீதம் எடை குறைவாக இருக்கும். அதனால் சராசரியாக பெண்ணின் இதய செயல்பாடும், ரத்த அழுத்தமும் சற்று குறைவாகவே இருக்கும். அதே போல், இதய நோயின் அறிகுறிகள் ஆண்களை விட சற்று வித்தியாசப்பட்டு இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு ஆண்களை விட குறைவாகவே இருக்கும். இளம் வயது பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலிக்கு பெரும்பாலும் மாரடைப்பு காரணமாக இருப்பதில்லை. மாரடைப்பு வந்தபின் பெண்களை விட ஆண்களுக்கு உயிர் ஆபத்து அதிகம். இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பினும், இதய நோய்களுக்கான வைத்தியத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

கேள்வி: மாரடைப்பு வருவதற்கு முன் எப்படி கண்டுபிடிப்பது? (திருமாவளவன், திருவெண்ணைநல்லூர்).

பதில்: ஒரு சுனாமி, ஒரு பூகம்பம் வருவதை எப்படி எவராலும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிவதில்லையோ அதே போல் ஒருவருக்கு மாரடைப்பு வருவதையும் எவராலும் முன்கூட்டியே அறிய இயலாது. ஆனால், நாம் முன்பு கூறியது போல் நல்ல வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதன் மூலமும், வருடாந்திர உடற்பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும் மாரடைப்பு வருவதற்கான காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்வதன் மூலம் மாரடைப்பு வருவதை பெரிதும் தவிர்க்க முடியும்.

கேள்வி: இதய மாற்று அறுவை சிகிச்சை குறித்து விளக்க முடியுமா? (அனந்தராமன், ஆரணி)

பதில்: முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை 1967-ல் டாக்டர் பர்னார்ட் என்பவரால் வெற்றிகரமாக தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது. வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது 'மீள முடியாத இதய செயல் திறன் குறைபாடு' உள்ளவர்களுக்கு ஒரு தீர்வாகவே அமைந்துள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம் மட்டுமே மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும். அதுவும், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட இதயம் நான்கு மணி நேரத்திற்குள் மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டும். மாற்று இதயம் பொருத்தப்பட்ட நோயாளிகள் சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடும். மேலும், அந்நோயாளி முதல் ஒரு வருடத்திற்கு மருத்துவக்குழுவின் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும். மாற்று இதயம் பொருத்தப்பட்ட நோயாளி எவ்வித நோய்த்தொற்றும் வராமல் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அத்துடன், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள், மருத்துவத்தரவுகளின் படி சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கேள்வி: இதய நோய் இருப்போர் மாடிப்படிகளில் பலமுறை ஏறி இறங்கலாமா? (கனகராஜ், மதுரை)

பதில்: இதய நோயாளிகள் மாடிப்படிகளில் பலமுறை ஏறி இறங்கலாம். ஆனால், மாரடைப்புக்குப்பின் இதய செயல் திறன் மிகவும் குறைந்தவர்களும், பைபாஸ் ஆபரேஷன் செய்துகொண்டவர்களும் முதல் ஒரு மாதம் வரையிலும் மாடிப்படிகளில் ஏறும்போது ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் நின்று, பின் மெதுவாக ஏறுவது நல்லது. மற்றபடி ஏனைய அனைத்துவித இதய நோயாளிகளும் மாடிப்படிகளில் தாராளமாக பலமுறை ஏறி இறங்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com