குழந்தைகள் எந்த வயதில் யோகா கற்கலாம்? - சத்குரு விளக்கம்

குழந்தைகளுக்கு சில யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படக் கூடாது, இது மிகவும் முக்கியம் என சத்குரு கூறி உள்ளார்.
குழந்தைகள் எந்த வயதில் யோகா கற்கலாம்? - சத்குரு விளக்கம்
Published on

யோகாசனம் செய்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்றாலும், எந்த வயதில் யோகா செய்யத் தொடங்கலாம்? என்பது பலரது மனதில் எழும் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்த கேள்விகளுக்கு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- குழந்தைகள் எந்த வயதில் யோகா கற்கவேண்டும்?

பதில்:- யோகா என்பது உங்களை வாழ்க்கையில் இருந்து தூரமாக எடுத்துச்செல்வது கிடையாது. இது வாழ்க்கையுடன் உங்களுக்கு ஆழமான ஈடுபாடு கொண்டுவருவது. அப்படியானால் எப்போது துவங்கவேண்டும்? அறுபது வயதிலா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக துவங்கவேண்டுமல்லவா?

சாதாரணமாக 7 வயது சரியான வயதாகக் கருதப்படுகிறது. ஒரு குழந்தைக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், அதிலிருந்து புத்திசாலித்தனமாக தேர்வு செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவேண்டும். இந்த வாய்ப்பை அவர்களுக்கு நீங்கள் வழங்காவிட்டால், அவர்கள் உலகில் என்னென்ன விஷயங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறார்களோ அவை மட்டுமே உலகில் உள்ளன என நம்பும் விதமாக மூளைச்சலவை செய்யப்படுவார்கள். குளிர்பானமா அல்லது பீட்சாவா என்றுதான் அவர்களால் தேர்வு செய்யமுடியும், அவர்கள் தேர்ந்தெடுக்க வேறெதுவும் இருக்காது.

சிறுவயதிலேயே சரியான விஷயங்களுக்கு குழந்தைகள் வெளிப்படுத்தப்படுவது மிகவும் முக்கியம். உள்ளிருந்து வேலைசெய்யும் விஷயங்களுக்கு அவர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், ஏனென்றால் உலகில் நம்மைச் சுற்றிலும் நாம் செய்யும் ஏற்பாடுகளை ஓரளவிற்குத்தான் விரும்பியபடி நம்மால் அமைத்துக்கொள்ள முடியும். உங்கள் நல்வாழ்வு வெளிசூழ்நிலையை சார்ந்ததாக, அதற்கு அடிமைப்பட்டதாக இருக்கும் வரையில், நல்வாழ்வு தற்செயலாகவே அமையும். ஏனென்றால் எவருக்கும் வெளி சூழ்நிலைகள் மீது 100 சதவீதம் ஆளுமை கிடையாது. அதோடு மக்கள்தொகை அதிகரிக்கும் விதத்தைப் பார்த்தால், அடுத்த தலைமுறையினரால் எவ்விதமான ஏற்பாடுகளை வெளிசூழ்நிலையில் செய்துகொள்ள முடியுமென்பது கேள்விக்குறியாக மாறுகிறது. 2050-ம் வருடத்திற்குள் நாம் 960 கோடி மக்களாகிவிடுவோம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ நான் விரும்பமாட்டேன். ஆனால் உங்கள் மகள் இங்கு இருக்கப்போகிறாள், அதனால் பிழைப்பிற்கு அவளுக்கு சில விசேஷமான திறமைகள் தேவைப்படும். அப்போது வாழ்க்கை சுலபமானதாக இருக்காது.

இதை கற்பனை செய்து பாருங்கள், இப்போது இருக்கும் அதே இடத்தில் 35 சதவீதம் அதிகமாக மக்கள் வசித்தால் உங்கள் அனுபவத்தில் எப்படி இருக்கும்? மிகவும் நெருக்கமாக நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு யோகா தெரிந்திருக்க வேண்டும். அப்போது நீங்கள் விரும்பிய விதத்தில் எல்லாம் உடலை வளைத்து உட்கார்ந்துகொள்ளலாம், அப்படி எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் சௌகரியமாகவே உணர்வீர்கள். எந்த நிலையில் உடலை வைத்திருக்கலாம் என்பதை முடிவுசெய்ய உங்களுக்கு வாய்ப்பிருக்காது.

நம் கல்விமுறையின் அங்கமாக யோகா மாறும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- குழந்தைகளுக்கென குறிப்பிட்ட யோகப்பயிற்சிகள் உள்ளதா?

பதில்:- 6, 7 வயதான பிறகு குழந்தைகள் செய்யக்கூடிய எளிய யோகப்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு சில யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படக் கூடாது, இது மிகவும் முக்கியம். சில இடங்களில் குழந்தைகளுக்கு பத்மாசனம் கற்றுத்தரப்படுவதை நான் கவனிக்கிறேன். அது அவர்களுக்கு கற்றுத்தரப்படக் கூடாது. எலும்புகள் வளர்ந்துகொண்டு இருக்கும் சமயத்தில், அது மென்மையாக இருக்கும்போது, எலும்பமைப்பின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் உடல்நிலைகளில் அமர்வது எலும்புகளை வளையச்செய்யும்.

யோகா கற்றுத்தருபவர்கள், குழந்தைக்குப் பொருந்தும் யோகாவைத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரின் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப யோகா கற்றுத்தரப்பட வேண்டும். வயதில் பெரியவர்களுக்கு கற்றுத்தரப்படும் அனைத்தும் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படக் கூடாது. வயதில் பெரியவர்களுக்கும் கூட, குடும்ப சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான யோகா கற்றுத்தருகிறோம். துறவிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் யோகா கற்பிக்கப்படுகிறது. அனைவருக்கும் ஒரேவிதமாக கற்றுக்கொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.

கேள்வி:- குழந்தைகளுக்கு யோகாவை எப்படி அறிமுகப்படுத்துவது? இளம் வயதில் இருந்தே யோகாவிற்கான தாகத்தை குழந்தைகளுக்குள் எப்படி விதைப்பது?

பதில்:- சப்தங்கள் மீது ஆளுமை கொண்டுவரும் நாதயோகா உள்ளது. ஒரு குழந்தை யோகா கற்கத் துவங்குவதற்கு இது மிகவும் எளிமையான மென்மையான வழி. உடல் மற்றும் மனதின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் இது வழிவகுக்கிறது. 6 அல்லது 7 வயதில் கற்கக்கூடிய யோக நமஸ்காரம் போன்ற பயிற்சிகளும் உள்ளன. குழந்தைகளுக்கும் எல்லா வயதினருக்கும் உபயோகமான உப-யோகா பயிற்சிகளும் உள்ளன.

குழந்தைகள் இது வழங்கும் பலன்களை கண்கூடாகக் காணும்போது, பலபேர் மத்தியில் திறமையளவில் அவர்களை இது ஒருபடி மேலே வைப்பதை அவர்கள் கவனிக்கும்போது, இயல்பாகவே யோகாவின் அடுத்தடுத்த நிலைகளை நாடுவார்கள். அவர்கள் வளரவளர, அவர்களுடைய யோகாவும் வளரவேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com