நற்குணங்களில் சிறந்தது எது?
ஆம், ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நற்குணம்- உண்மை பேசுதல். சொல்லிலும், செயலிலும் உண்மையாக நடந்துகொள்ளுதல்.
இஸ்லாத்தின் பார்வையில் உண்மை என்பது மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களை எடுத்துக்கொள்ளலாம். முதல் இறைத்தூதர் ஆதம் நபி முதல், கடைசியாக வந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அனைத்து இறைத்தூதர்களும் உண்மையைப் பேசி அதன் வழி நடந்துள்ளார்கள்.
எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராகீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார், என்று இப்ராகீம் நபி குறித்து (திருக்குர்ஆன் 19:41) தெரிவிக்கின்றது.
இத்ரீஸ் நபியைக் குறித்து (திருக்குர்ஆன் 19: 56) கூறும்போது: (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்.
இறுதித்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களை மக்கள் உண்மையாளர், நம்பிக்கையாளர் என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு ஜாதி, மத வேறுபாடு இன்றி அவரது சொல்லும், செயலும் அன்றாட வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் உண்மையாக அமைந்திருந்தது.
இறை நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும், மறுமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:
இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள், மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (திருக்குர்ஆன் 9:119).
ஒரு மனிதன் உண்மையைப்பேசி, உண்மையாக நடந்து கொண்டால் அந்த செயலின் மூலம் அவன் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று நபிமொழிகள் குறிப்பிடுகின்றன.
உண்மை நன்மைக்கே வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையையே பேசி, உண்மையையே தேடினால் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஓர் உண்மையாளன் என்று எழுதப்படுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகிற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசும் காலமெல்லாம் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஒரு பொய்யன் என்று எழுதப்படுவான். (நூல்: புகாரி, முஸ்லிம்)
உண்மை பேசுவதாக எனக்கு உத்தரவாதம் தாருங்கள்; சுவனத்தை நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகின்றேன். (நூல்: அஹ்மத்).
உண்மை என்பது மன அமைதியைத் தரும். பொய் என்பது கலக்கத்தைத் தரும். (நூல்: திர்மதி, அஹ்மத்).
மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இந்த வாழ்க்கையில் உள்ள உலக இன்பங்களில் மயங்கி பொய்யும், புறமும் பேசி வாழ்வது நமது மறுமை வாழ்வை வீணடித்துவிடும். அந்த பாவச்செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம்.
உண்மையே பேசுவோம், நன்மைகளையே நாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக. ஆமீன்.
பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.

