முயற்சியை கைவிடாதீர்கள்- நாகமகேஸ்வரி

தொழிலைத் தொடங்கும்போது எனக்குள் நானே கூறிக்கொண்ட தாரக மந்திரம், ‘எதற்காகவும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது’ என்பதுதான்.
முயற்சியை கைவிடாதீர்கள்- நாகமகேஸ்வரி
Published on

"சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு பெரிய இடவசதியோ, அதிக அளவு பணமோ தேவையில்லை. சிறிய முதலீடும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். குறிப்பாக இல்லத்தரசிகள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்தபடி வீட்டில் இருந்தே சொந்தத் தொழிலில் ஈடுபடலாம்" என்கிறார் சென்னை தாழம்பூரைச் சேர்ந்த நாகமகேஸ்வரி. குடும்பத்தையும், தொழிலையும் வெற்றிகரமாக நிர்வகித்து வரும் அவரது பேட்டி…

"என்னுடைய குழந்தைக்கு எல்லாவற்றிலும் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. அதற்கான எனது தேடல் நீண்டுகொண்டே சென்றது. என் கணவருடைய பணியின் காரணமாக குடும்பத்தோடு அடிக்கடி வெளியூர்களில் வசிக்க நேர்ந்தது. அவ்வாறு நாங்கள் செல்லும் ஊர்களில், குழந்தைகளுக்கான சிறந்த பொருட்களைத் தேடித்தேடி வாங்கினோம்.

ஒரு ஊரில் நாங்கள் வாங்கிய பொருட்கள் தரமாகவும், விலை குறைவாகவும் இருந்தன. அதைப் பார்த்த எங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கும் அதுபோல வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்காக மொத்த விலையில் பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். அப்போதுதான் இதையே தொழிலாக செய்யலாம் என்று தோன்றியது. இவ்வாறுதான் எனக்கான தொழில் தொடங்கும் வாய்ப்பை நானே அமைத்துக் கொண்டேன்.

அன்று நண்பர்கள் மத்தியில் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்த நான், இன்று முகநூலில் ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறேன். குழந்தைகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் எனது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்கிறேன். எனது குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு தொழிலையும் நிர்வகித்து வருகிறேன்.

பொருட்களை சந்தைப்படுத்துவது பற்றி கூறுங்கள்?

குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதால், என்னால் வெளியில் சென்று பொருட்களை விற்பனை செய்ய முடியாது. இதனால் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தான் சந்தைப்படுத்துகிறேன். மேலும், என்னிடம் 40-க்கும் அதிகமான மறுவிற்பனையாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இல்லத்தரசிகள். அவர்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்கிறேன். இத்தகைய பொருட்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக, புதிதாக வாடகை நூலகம் ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

தொழில் முனைவோராக எந்த வகையில் உங்களை மேம்படுத்திக்கொண்டீர்கள்?

தொழிலைத் தொடங்கும்போது எனக்குள் நானே கூறிக்கொண்ட தாரக மந்திரம், 'எதற்காகவும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது' என்பதுதான்.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு ஏற்பட்ட காலகட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை மட்டுமே கொரியர் மூலமாக அனுப்புவதற்கு அனுமதி இருந்தது. அந்த நேரத்தில் சமயோசிதமாக யோசித்து, குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை மொத்தமாக தொகுப்பாக வழங்கினோம். அது வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இக்கட்டான நேரத்திலும் சமயோசிதமாக செயல்பட்டால், எந்த சூழ்நிலையையும் நமக்கு சாதகமாக மாற்ற முடியும் என்பதை இதன் மூலமாக தெரிந்து கொண்டேன்.

உங்களின் முன்மாதிரி யார்?

என்னுடைய அம்மா தமிழ்செல்வி தான் எப்போதும் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார். சிறு வயதில் இருந்தே 'சொந்தமாக தொழில் செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது அவர்தான். அவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். இருந்தபோதும் எனது தந்தை முருகவேல் உடல்நலக் குறைவால் சிரமப்பட்டபோது, அவர் நடத்தி வந்த தொழிலை முழுமையாக கவனித்துக்கொண்டார். இப்பொழுதும் அவர் அந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தொழில் தொடங்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும், முனைப்பும், 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். யாருடைய ஆதரவும் இன்றி நீங்களாகவே உங்களுக்கு விருப்பமான தொழிலைத் தொடங்கலாம்.

எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தபோதுதான் என்னுடைய தொழிலைத் தொடங்கினேன். இடையில் எப்பொழுதும், எதற்காகவும் அதை நிறுத்தி வைக்கவில்லை. எனது இரண்டாவது குழந்தை பிறந்த பின்னரும், இடைவெளி இல்லாமல் இந்த தொழிலை செய்து வந்தேன். இவ்வாறு தொழில் தொடங்க விரும்புபவர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வளர்ச்சியடைய முடியும். எந்த சூழ்நிலையிலும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றி உங்களின் கருத்து என்ன?

எனது தேவைகளை என் கணவர் ஹரிஹரனால் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் என்னுடைய பெற்றோருக்கு நான் ஏதேனும் உதவி செய்ய நினைத்தால், கணவர் பணம் கொடுக்க தயாராக இருந்தும், அதை அவரிடம் கேட்பதற்கு எனக்கு தயக்கமாக இருக்கும். நான் சுயமாக சம்பாதித்து பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்கும்போது, என்னால் தனித்து செயல்பட முடியும். என் பெற்றோரையும் கவனித்துக்கொள்ள முடியும். எனக்கான தேவை களையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். எனவே பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.

தொழிலைத் தவிர சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன?

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் குழுவில் நானும் இணைந்து பணியாற்றினேன். இப்பொழுதும் அதில் உறுப்பினராக செயலாற்றி வருகிறேன். என்னால் முடிந்த உதவிகளை அதன் மூலமாக செய்கிறேன். எனது நண்பர்களுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். அதில் முக்கியமாக உளவியல், குழந்தை பராமரிப்பு, புத்தகங்கள் தொடர்பான தகவல்களை பதிவிட்டு வருகிறோம். பெண்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் குழந்தை பராமரிப்புப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் நவீனப் பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக செல்போன்களின் பயன்பாடு அவர் களிடையே அதிகரித்து வருகிறது. அதன் மூலம் குழந்தைகள் அதிக அளவு எதிர்மறையான விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். முடிந்தவரையில் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ற விஷயங்களை கற்றுக்கொடுப்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com