சூடானில் இந்திய தூதரகத்தின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது- மும்பை திரும்பிய பயணிகள் உருக்கம்

சூடானில் இந்திய தூதரகத்தின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என மும்பை திரும்பிய பயணிகள் உருக்கமாக கூறியுள்ளனர்.
சூடானில் இந்திய தூதரகத்தின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது- மும்பை திரும்பிய பயணிகள் உருக்கம்
Published on

மும்பை, 

சூடானில் இந்திய தூதரகத்தின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என மும்பை திரும்பிய பயணிகள் உருக்கமாக கூறியுள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் மாறியது

உள்நாட்டு போர் நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 246 இந்தியர்கள் நேற்று முன்தினம் மும்பை வந்தனர். அவர்களை சூடானில் உள்ள இந்திய தூதரகத்தினர் மீட்டு இந்திய விமானப்படை போர் விமானம் மூலமாக அழைத்து வந்தனர். மும்பை வந்து இறங்கியவர்கள் இந்திய தூதரகத்தின் பணியை பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து அப்துல் காதிர் (வயது39) என்ற தொழில் அதிபர் கூறியதாவது:-

நான் 2017-ம் ஆண்டு முதல் சூடானில் உள்ளேன். அங்கு அசாதாரண சூழல் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் இந்த முறையில் நிலைமை எதிர்பார்க்காத வகையில் மோசமாகிவிட்டது. ரம்ஜான் மாதம் பதற்றம் குறையும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு மணி நேரத்தில் நிலைமை எல்லை மீறி சென்றது. உணவு, மளிகை பொருள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை.

சலுகைகள் கிடைத்தது

இந்தியர் என்பதால் எங்களுக்கு பல சலுகை கிடைத்தது. பல சோதனை சாவடிகளை சிரமம் இன்றி கடந்து வந்தோம். ஒகார்தூமில் நிலைமை மோசமாக இருந்தது. இந்திய தூதர் பி.எஸ். முபாரக் மற்றும் 8 அதிகாரிகள் கடுமையாக ஓய்வின்றி உழைத்தனர். குறைந்த ஊழியர்களுடன் அவர்கள் நிறைந்த பணி செய்தார்கள்.

உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. நானும் மோசமான சூழல் நிலவி வந்த இடத்தில் சிக்கி இருந்தேன்.

வார்த்தையால் விவரிக்க முடியாது

ஆனால் தூதரக அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்களுடன் தொடர்பில் இருந்தேன். தூதரக அதிகாரி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இந்தியர்களை இணைத்து வாட்ஸ்அப்பில் குழு அமைத்தார். அதன் மூலம் அனைவருக்கும் உதவி கிடைப்பதை உறுதி செய்தார். பாதுகாப்பு படையை சேர்ந்த குர்பிரீத் சிங் என்னை உயிரை பணையம் வைத்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு பயணி கூறுகையில், "அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் பணியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தூதரகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளும் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டும் என அல்லாவை வேண்டி கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com