உலக புவி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக புவி தினம்
Published on

1969-ம் ஆண்டு கலிபோர்னியாவில் மிகப்பெரிய எண்ணெய் கசிவு அதிக சேதத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உலக புவி தினத்தை, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க செனட்டரான கெய்லார்ட் நெல்சன் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த இந்த தினம் ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என அவர் கருதினார். இந்த தினம் 1970-ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற பல சுற்றுசூழல் பிரச்சினைகள் உள்ள பூமியில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக புவி தினத்தின் கருப்பொருள் 'எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்' என்பதாகும். பூமியைத் தவிர மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் வேறு கிரகத்தில் உள்ளதா? என ஆராய்ந்து வரும் நிலையில், நாம் வாழும் பூமியை சுற்றுசூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தவறிவிட்டோம். சுற்றுசூழலை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், நலமாக வாழ்வதற்கு ஆரோக்கியமான இடமாக பூமியை மாற்றுவதும்தான் இந்த உலக புவி தினத்தின் நோக்கமாகும்.

காடுகள் அழிப்பு, வன விலங்குகளை வேட்டையாடுவது, மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகளவிலான பாலிதீன் பயன்பாடு, மக்காத பொருட்களை மண்ணில் வீசுவது, நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாடு போன்ற பல செயல்பாடுகளால் இயற்கையின் சமநிலைப் பாதிக்கப்படுகிறது. நிலத்தில் அதிகளவிளான பூச்சிகொல்லி பயன் படுத்துவதால் நிலம் மலடாகிறது. கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக காற்று மாசுபடுவதுடன், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு, இயற்கை பேரழிவுகள், குடிநீர் பற்றாக்குறை, பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றும் வாகனத்திற்கு பதிலாக மின்சார வாகனங்கள், சைக்கிள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணிப்பைகளை உபயோகிப்பது, மரங்களை நடுவது, மறு சுழற்சி செய்த பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையை பாதுகாத்திட முடியும். பசுமையான, வளமானதாக இந்த பூமியை மாற்ற அரசாங்கமும், பொதுமக்களும் செயல்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களோடு நாமும் ஒன்றிணைந்து, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க முயற்சிப்போம். இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் நமது பூமியின் இயற்கை வளங்களை நம்முடைய சந்ததியினருக்கு அளிக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com