உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினம்
Published on

உலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31-ந் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1988-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், புகையிலை அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவும் இந்த நாள் மிகவும் உதவுகிறது. புகையிலைப் பொருட்களினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் இறக்கின்றனர். இது 2030-ம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என ஒரு தகவல் சொல்லுகிறது.

நுரையீரல், குரல்வளை, வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், பெருங்குடல் மற்றும் கருப்பை வாய் என பல வகையான புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. புகையிலை மக்களிடையே பல்வேறு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிறது.

இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் 'புகையிலை நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்' என்பதாகும். அரசும் விற்பனை வரம்பு, விளம்பரம், புகையிலைப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் மக்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வழிவகை செய்துள்ளது. 2008-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அனைத்து புகையிலைப் பொருட்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை தடை செய்ய அழைப்பு விடுத்திருந்தது. 2019-ம் ஆண்டு எலக்ரானிக் சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, சேமிப்பு, விளம்பரம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. உலகில் 124-க்கும் மேற்பட்ட நாடுகளில் புகையிலை வளர்க்கப்படுகிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 67 லட்சம் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சீனா 39.6 சதவீதமும், இந்தியா 8.3 சதவீதமும், பிரேசில் 7 சதவீதமும், ஐக்கிய அமெரிக்கா 4.6 சதவீதமும் புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன. புகையிலையை வணிகப் பயிராகப் பயிரிட்டால் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிலையான உணவு உற்பத்தி பாதிக்கப்படும். சுவாச பயிற்சி, தசை தளர்வு, யோகா மற்றும் இசை கேட்பது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க மாற்று முறைகளை பயன்படுத்துவதன் மூலம் புகையிலை உபயோகிப்பதை குறைக்கலாம். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு புரிய வைக்க பொது விவாதங்கள், ஊர்வலங்கள், சுகாதார முகாம்கள், அணிவகுப்புமற்றும் பேரணிகள் என பல வகையான செயல்கள் இந்த தினத்தில் நடைபெறுகின்றன. உலக புகையிலை எதிப்பு தினம், இந்த கொடிய பழக்கத்தை அனைவரும் விட்டுவிடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

-ஆர்.கிஷோர், 12-ம் வகுப்பு,

மான்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளி,

பெரம்பூர், சென்னை-11.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com