

மூங்கில்துறைப்பட்டு,
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலினால் உடலில் இருந்து வியர்வை வடிந்து தாகத்தை வருத்துகிறது. இதை தணிக்க நீர்சத்து அதிகமுள்ள இளநீர், மோர், பதனீர், பழசாறு, நுங்கு ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக பிரதான சாலைகளில் சிலர் கடைகள் வைத்து இளநீர், நுங்கு, பழச்சாறு ஆகியவற்றை விற்பனை செய்து வருவதை காண முடிகிறது. அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மேல்சிறுவள்ளூர், புதூர் கூடுசாலை, புதுப்பேட்டை, புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உடல் சூட்டை தணிக்கும் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பதனீர்
பிரதான சாலை மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வியாபாரிகள் நுங்கு குலைகளை விற்பனைக்காக குவித்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 4 நுங்கு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிகிறது. அதேபோல் சிலர் பானைகளில் பதனீர் வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர்.