விமான நிலைய படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!


விமான நிலைய படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்..!
x

விமான நிலையத்தில் வேலை என்றவுடன், நமக்கு பைலட் பணியும், விமானப் பணிப்பெண் பணியுமே நினைவிற்கு வரும். ஆனால் இவ்விரண்டை தாண்டியும், விமான நிலையங்களில் நிறைய பணிகள் இருக்கின்றன. அதில் இணைவதற்கு என பிரத்யேக படிப்புகளும் இருக்கின்றன. அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோமா..!

* பி.எஸ்சி. ஏவியேஷன்

பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் எடுத்து படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். இந்த மூன்று ஆண்டுக்கால படிப்பில், ஏர்போர்ட் ஆபரேஷன், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் வெதர், நேவிகேஷன், விமான நிலையம் செக்யூரிட்டி அண்ட் சேப்டி, டேஞ்சரஸ் கூட்ஸ், ப்ளைட் ஆபரேஷன்ஸ், விமானம் புறப்படுவதற்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இன்டெர்னல் மெக்கானிஸம் ஆப் ஏர்கிராப்ட் போன்ற பாடங்களை கற்றுத்தருவார்கள்.

படிப்பை முடித்தவர்களுக்கு ஏவியேஷன் செக்யூரிட்டி, கார்கோ ஹேண்ட்லிங், பைலட் இன்ஸ்ட்ரக்டர், பிளைட் ஆபரேஷன், டெஸ்ட்பாச்சர், பிளைட்/டேட்டா அனாலிசிஸ், லோட் அண்ட் ட்ரிம் பிரிவுகளில் வேலைகள் காத்திருக்கின்றன. சில கல்லூரிகளில் பி.பி.ஏ. ஏவியேஷன், எம்.பி.ஏ. ஏவியேஷன் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன.

* பி.எஸ்சி. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ்

ஏவியேஷன் படிப்பில் இருக்கும் பாடங்களுடன் ஏர்கிராப்ட் டிசைன், மெயின்டனன்ஸ் என்ஜினீயரிங் ஆகியவற்றை கூடுதலாகக் கற்றுத்தருவார்கள். பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருப்பவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

படிப்பை முடித்தவர்களுக்கு லைன் மெயின்டனன்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ஏர்கிராப்ட் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட், பிளானிங் ஆப் ஏர்கிராப்ட் சர்வீஸிங், கிரவுண்ட் எக்யூப்மெண்ட் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் ப்ளீட் மேனேஜ்மெண்ட், பர்ச்சேஸ், லீஸ் அண்ட் சார்ட்டர்ஸ், ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன், ஹாஸ்பிட்டாலிட்டி, பேக்கேஜ் ஹேண்ட்லிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ், எரிபொருள் விநியோகம், மேலாண்மை மற்றும் தரக் கட்டுப்பாடு, எஸ்டேட் மேனேஜ்மெண்ட், ஏர்பீல்டு செக்யூரிட்டி ஆகிய துறைகளில் பணிகள் கிடைக்கும்.

* பி.பி.ஏ. ஏர்லைன்ஸ் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட்

பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. விமான நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான தகுதிகளையும், திறன்களையும் வளர்ப்பதுதான் படிப்பின் நோக்கம்.

விமான நிலையம் இயங்கும் முறைகள், பணியாளர்களை நிர்வகித்தல், மற்ற துறைகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு மற்றும் அவசர கால நிர்வாகம், சரக்கு போக்குவரத்து நிர்வாகம், விமான நிலைய நிர்வாகம், ஏர்டிராபிக் கண்ட்ரோல், ஏவியேஷன் நுட்பங்கள் ஆகிய முக்கிய பாடங்களை கற்றுத்தருவார்கள். அதுமட்டுமின்றி, பிறரோடு தகவல் தொடர்பு கொள்ளும் திறன், மொழித்திறன், ஆளுமைத் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் பாடங்களும் கற்பிக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் பொறுப்புமிக்க பணிகளில் சேரவும் வாய்ப்புகள் உண்டு.


Next Story
  • chat