உலகின் ஆபத்தான வேலைகள்..!


உலகின் ஆபத்தான வேலைகள்..!
x

உலகில் ஒயிட் காலர் வேலைகள், புளூ காலர் வேலைகள் என பல வேலைகளில் ‘தில்லுக்கு துட்டு’ வகையிலான வேலைகளும் உண்டு. அவை கேட்பதற்கும், படிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் சவாலானது. சிக்கலானது.

இருப்பினும் நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை என்பதால், உலகின் பல மூலைகளிலும் இந்த வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சில ஆபத்தான வேலைகளை தெரிந்து கொள்வோமா...

முதலை மருத்துவர்

மனிதனையே வேட்டையாடக்கூடிய முதலைகளின் இயல்பைத் தெரிந்துகொண்டு அதனைப் பராமரிக்கும் பயங்கர வேலை. இதில் சலிப்பு தட்ட வாய்ப்பே இல்லை. தினசரி வாழ்வா?, சாவா?, என முதலை துரத்த நீங்கள் ஓடுவதால் எக்ஸ்ட்ரா எனர்ஜியோடு இருப்பீர்கள். முதலைகள் விளையாட்டுத்தனம் கொண்டவை என்பார்கள், அதோடு அதில் உக்கிர புத்தர்களும் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு ஒரு ஆண்டிற்கு 41 லட்சத்து 67 ஆயிரத்து 812 ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.

புயலைத் துரத்துபவர்

புயல் என்றால் வீட்டிற்குள் அடங்கியிருக்கும் நம் மத்தியிலும், புயலை விரட்டிச் சென்று ஆராயும் மனிதர்களும் உலகில் உண்டு. புயல் எங்கு பயணிக்கிறது, எவ்வளவு சேதத்தை ஏற்படுத்துகிறது, எவ்வழியாக பயணிக்கிறது.... இப்படியாக பல தகவல்களை, சேகரித்து கொடுக்க வேண்டும். அப்படி செய்கிறவர்களுக்கு, ஓராண்டிற்கு 40 லட்சத்து 67 ஆயிரத்து 785 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.

விஷம் சேகரிப்பாளர்

நீங்கள் செய்யவேண்டியது, பாம்பின் தலையை சின்ன டம்ளரில் அழுத்தி பாம்பு பல்லில் உள்ள விஷத்தை அதில் சேகரித்துக்கொண்டே இருப்பதுதான். சொல்லும்போதே 'திடுக்' என நெஞ்சம் அதிர்பவர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.

தைரியமாக செய்யவேண்டிய நச்சு சேகரிப்பின் மூலம் பெறும் நச்சு திரவம், வாதம், புற்றுநோய்க் கட்டிகள் உட்பட பல நோய்களுக்கான வீரிய மருந்து. முதலில் படபடப்பாக இருந்தாலும், பாம்பின் பல்லை அழுத்தி அழுத்தி வேலை பழகிவிடும். இந்த வேலைக்கு சம்பளம், 20 லட்சத்து 550 ரூபாய்.

கடல் குகை ஆய்வாளர்

இதுவும் ஸ்கூபா டைவிங் போல கடல் விளையாட்டோடு சேர்ந்ததுதான். கடல் குகைகளை ஆராய்வதுதான் இதில் ஒரே வித்தியாசம். கடலில் மூழ்குவது, ஆழ்கடல் அழுத்தத்தை தாங்குவது, சிறிய பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்வது... இப்படி இதற்கெல்லாம் நீங்கள் தாக்குப் பிடித்தால்... இந்த வேலையை பற்றி சிந்திக்கலாம்!

ஆழ்கடலுக்குள், 'ஜில்'லென இருந்து கொண்டு, சிலிண்டர் மாட்டியே ஆண்டுக்கு 39 லட்சத்து 10 ஆயிரத்து 408 ரூபாயை கசங்காமல் பெறலாம்.

காட்டுத்தீ அணைக்கும் வீரர்

'திரில்' மற்றும் திகில் இரண்டையும் திகட்டத் திகட்ட விரும்பினால் தாராளமாக இப்பணியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தீ அணைப்பதுதான் வேலை என்றாலும், எரியும் காட்டிற்கு நடுவே விமானத்திலிருந்து பாராசூட் அணிந்து உயிரைத் துச்சமாகக் கருதி காட்டை காப்பாற்ற வேண்டும். இதோடு சேர்த்து, தீ அணைப்பவரும் உயிரோடு இருக்க வேண்டும்.

சுற்றுலா வழிகாட்டி

'கவ்பாய்' ஸ்டைலில் தொப்பி, துப்பாக்கி என காட்டுக்கு வரும் பயணிகளை ஜீப்பில் கூட்டிப் போய் வேட்டை விலங்குகளுக்கு அறிமுகம் செய்வார்களே, அதே ஜங்கிள் சபாரி வழிகாட்டி பணிதான்.

மூர்க்க விலங்குகளை சமாளித்து ஆர்வக்கோளாறு பயணிகளை அனுசரித்துப் போனால் ஆண்டுக்கு 46 லட்சத்து 67 ஆயிரத்து 950 ரூபாய் சம்பளமாக பெறலாம்.

சண்டை டூப்புகள்

'ரிஸ்க்' எக்கச்சக்கம் என்றாலும் காசுக்குக் குறைவில்லை. ஹாலிவுட்டில் நட்சத்திர நடிகருக்கு ஏற்ற உடலமைப்பு இருந்தால் போதும், எடுக்கிற ரிஸ்கிற்கு அதிக வருமானம் பார்க்கலாம். கர்ணமடித்து, அடி உதை வாங்கி, சினிமாவின் பட்ஜெட்டிற்கு ஏற்ப சம்பளம் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.


Next Story
  • chat