மணிப்பூரின் ஆட்டோ ராணி..!


மணிப்பூரின் ஆட்டோ ராணி..!
x

மணிப்பூர் வாசிகளிடம் ரொம்பவே பிரபலமான பெயர், லைபி ஓய்னம். நோய்வாய்ப்பட்ட கணவர், படித்துக்கொண்டிருக்கும் மகன்கள் என குடும்பம் வறுமையில் சுழல லைபி ஓய்னம் வாடகை ஆட்டோவை ஓட்டத் தொடங்கினார். இது நடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன.

அப்போது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவது என்பது மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயம். அதுவும் ஆண்களைப் போல பேன்ட், சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிய லைபி சந்தித்தது எதிர்ப்புகளை மட்டும்தான். ஆனால், துவண்டு போகாத லைபி ஆட்டோ ஓட்டி சம்பாதித்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.

அத்துடன் சொந்தமாக ஆட்டோ வாங்கி மணிப்பூர் பெண்களின் ரோல்மாடலாக மாறிவிட்டார். இன்று ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் லைபி ஓய்னத்தின் ஆட்டோ மணிப்பூர் சாலைகளில் பறந்து கொண்டிருக்கிறது. அவரை எதிர்த்தவர்கள் எல்லாம் இப்போது லைபியைச் சந்திக்கும்போது மரியாதையுடன் புன்னகைக்கின்றனர்.

''எதிர்ப்புகளுக்கு இடையே பணி செய்வது என்பது இயலாத காரியம். அதேபோல, மலை வழிப் பாதைகள் நிறைந்த மணிப்பூரில் ஆட்டோ ஓட்டுவதும் சவாலான காரியம். இவ்விரண்டையும் நான் எதிர்கொண்ட விதம், இன்று எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் முதல் பெண்ணாக மணிப்பூரில் ஆட்டோ ஓட்டியதையும், கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநனராக செயல்படுவதையும், ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். அதற்கு விருதும் கிடைத்திருக்கிறது'' என்று பெருமைப்படும், லைபி ஓய்னம் கொரோனா லாக்டவுன் காலத்தில், 100 கிலோமீட்டர் தனியாக பயணித்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட செவிலியரை மீட்டு வந்ததற்காக, மத்திய அரசால் கவுரவிக்கப்பட்டார்.

சமீபத்தில் நடந்த கலவரத்தின்போதும், சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமான இடங்களுக்குக் கொண்டு சேர்த்து, பாராட்டுகளை அள்ளினார்.


Next Story