சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியர் பணி..!


சமூகத்தை கட்டமைக்கும் ஆசிரியர் பணி..!
x

ஆசிரியர் பணி என்பது சாதாரண பணி அல்ல. அது ஒரு மாபெரும் தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள்.

அன்ன ஸ்டெபி

ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு படிப்புகளை பற்றியும் அந்த படிப்பின் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை பற்றியும் அறிந்து கொள்கிறோம். அந்தவகையில் இந்த வாரம் ஆசிரியர் பணியின் முக்கியத்துவம் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் கல்வியாளர் அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி என்பது சாதாரண பணி அல்ல. அது ஒரு மாபெரும் தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். கல்வியைத் தவிர உலகிலுள்ள அனைத்து சொத்துக்களும் அழிவடையக்கூடியன. பிற செல்வங்கள் நீரினாலோ, நெருப்பினாலோ அழிவடையும். அதனால் நிலையானதாகக் கருதப்படும் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கும் ஆசிரியர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் தம்மை நாடி வரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கற்றுக்கொடுத்து அவர்களை வளப்படுத்துகிறார்கள். அதனைத் தவிர விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஊக்கம், நற்பழக்கங்கள், பொது அறிவு மற்றும் வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருகிறார்கள். ஒரு தவறான மாணவனையும் சிறந்த ஆசிரியரால் நல்வழிப்படுத்த முடியும்.

இலக்கு..

ஆசிரியப் பணியானது வெறுமனே எழுத்தறிவை போதிப்பது மட்டுமல்ல. நற்பண்புகள் பொருந்திய மனிதர்களாக மாணவர்களை வளர்த்தெடுப்பதே ஆசிரியப் பணியின் மிக முக்கிய இலக்கு. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே தெளிந்த நீரோடை போல அமைதியானதொரு நல்லுறவு காணப்பட வேண்டும். ஆசிரியர்கள் சுயநலமற்றவர்களாகவும், மாணவர்களை அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும் விளங்க வேண்டும்.

மாணவர்கள் தவறு செய்யும்போது அவர்களை வன்சொற்களால் தண்டிக்காமல் தம் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்த வேண்டும். ஆசிரியரது நடை உடை பாவனைகளும், செயற்பாடுகளும் மாணவர்களை கவரும் வகையிலும் அவர்கள் மதிக்குமாறும் அமைய வேண்டும். மாணவர்களும் ஆசிரியர்கள் கூறும் நற்சொற்களை செவிமடுத்து அவற்றை பின்பற்ற வேண்டும்.

ஆசிரியரோடு தனிப்பட்ட முரண்பாடுகளை தவிர்த்து அவர்கள் கற்றுத்தரும் நற்பண்புகளை பின்பற்றினால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

ஆசிரியப் பணியிலுள்ள சவால்கள்

ஆசிரியப் பணியானது இன்று சவால்கள் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாட்டால் மாணவர்களிடையே கல்வியின் மீதுள்ள நாட்டம் குறைந்து வருகிறது. இதனைத் தவிர மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

சமூகவளர்ச்சியில் ஆசிரியப் பணி

"இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்" என்பதற்கு ஏற்ப இன்றைய இளைய தலைமுறையினரே எதிர்காலத்தில் பயன்தரும் விருட்சங்களாகக் கருதப்படுகின்றனர். எனவே சிறுவர்களை திறம்பட வழி நடத்தி சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டின் இளைஞர்களையே அடிப்படையாக கொண்டிருக்கிறது. அத்தகைய இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு, ஆசிரியர்களின் கைகளிலேயே இருக்கிறது.

இவ்வளவு சிறப்பு மிகுந்த ஆசிரியர் பணியை 6 மாத, ஒரு வருட, குறுகிய கால பயிற்சியாகவும் பெறலாம். அதேசமயம், 3 வருட படிப்பாகவும் படிக்கலாம். மேலும் இயல்பான மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களை போலவே, ஆட்டிசம் மாணவர்களை வழிநடத்தும் சிறப்பு ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இவைமட்டுமின்றி, மாண்டிசேரி எனப்படும் மழலை குழந்தைகளை வழிநடத்தும் ஆசிரியர்களின் பங்கும் அதிகரித்திருக்கிறது.



Next Story