போலி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது

போலி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போலி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது
Published on

மும்பை, 

மும்பை பி.கே.சி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அலிபாக்கில் உள்ள பங்களா வீட்டை வாடகைக்கு முன்பதிவு செய்ய ஆன்லைனில் தேடி வந்தார். அதில் இருந்த ஒரு இணையதளம் லிங்க்கை தொடர்பு கொண்டார். அலிபாக்கில் பங்களா வீட்டை முன்பதிவு செய்ய ரூ.90 ஆயிரம் செலுத்துமாறு பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி பணத்தை செலுத்திய பிறகு அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், போலி இணையதளம் மூலம் பங்களா வீடு வாடகைக்கு விடுவதாக கூறி பலரிடம் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் ஆகாஷ் வாத்வானி (வயது23) எனவும், இவர் மீது ஏற்கனவே 20 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வந்தார். இறுதியாக ஜூகுவில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com