500 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சண்முக சுந்தரம் மரணம்; உடல் தகனம் இன்று நடக்கிறது


500 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சண்முக சுந்தரம் மரணம்; உடல் தகனம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 15 Aug 2017 9:57 PM GMT (Updated: 15 Aug 2017 9:57 PM GMT)

500 படங்களுக்கு மேல் நடித்த குணச்சித்ர நடிகர் சண்முக சுந்தரம், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.

சென்னை,

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், சண்முக சுந்தரம். இவர், பழம்பெரும் நடிகை சந்திரகாந்தாவின் தம்பி ஆவார். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார்.

இவர், கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை 8-45 மணிக்கு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அவருடைய இறுதி சடங்கு இன்று காலை (புதன்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மாலை 3 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

மரணம் அடைந்த நடிகர் சண்முக சுந்தரத்துக்கு வயது 79. சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பாம்புரம். மனைவி பெயர், சுந்தரி. இவர்களுக்கு கீதா, பவித்ரா என்ற 2 மகள்களும், பாலாஜி என்ற மகனும் இருக்கிறார்கள்.

சண்முக சுந்தரம் 12 வயதிலேயே மேடை கச்சேரி செய்தார். ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார். 1963-ம் ஆண்டில், ‘ரத்த திலகம்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். கர்ணன், வாழையடி வாழை, மவுனம் சம்மதம், கிழக்கு வாசல், ஷாஜகான், சென்னை-28, சரோஜா, கோவா, நண்பன், பிரியாணி உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் அப்பா வேடங்களிலும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து இருந்தார்.

கடைசியாக, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவரால் ‘டப்பிங்’ பேச முடியவில்லை. அவருக்கு பதில் வேறு ஒருவர் குரல் கொடுத்து இருந்தார்.


Next Story