காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு பலியாவதை தடுக்க ரூ.8 கோடி செலவில் வேலி


காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு பலியாவதை தடுக்க ரூ.8 கோடி செலவில் வேலி
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 29 April 2017 9:00 PM GMT)

ரெயிலில் அடிபட்டு காட்டு யானைகள் பலியாவதை தடுக்க கேரள அரசு ரூ.8 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்கிறது.

கோவை

கோவையை அடுத்த போத்தனூரிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரெயிலில் அடிக்கடி அடிபட்டு இறக்கின்றன. இதை தடுக்க ரெயில்வே நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காட்டு யானைகள் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் இடங்கள் எவை? என்று அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் உள்ள மண் மேடுகளை அகற்றுதல், அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்துதல், ரெயில்களின் வேகத்தை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கோவையை அடுத்த வாளையாறு–கஞ்சிக்கோடு இடையே உள்ள 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ‘ஏ’ ரெயில்பாதை என்றும் ‘பி’ ரெயில்பாதை என்றும் 2 ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. இதில் ‘ஏ’ ரெயில்பாதை சமவெளி பகுதியிலும், ‘பி’ ரெயில்பாதை அடர்ந்த காட்டுப்பகுதி வழியாகவும் செல்கிறது. இது ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டது. இந்த இரண்டு ரெயில் பாதைகள் வழியாகவும் ரெயில்கள் வந்து செல்கின்றன.

தடுப்பு வேலி

வாளையாறு–கஞ்சிக்கோடு இடையே ரெயில்களில் காட்டு யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க இரண்டு பக்கமும் தடுப்பு வேலி அமைக்க கேரள அரசு முடிவு செய்து இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் விடப்பட்டுள்ளது. கேரள அரசு ஒதுக்கிய நிதி மூலம் பாலக்காடு ரெயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து இந்த தடுப்பு வேலிகளை அமைக்க உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ஜெயராஜ் மற்றும் சுபவர்ண கோகிலன் ஆகியோர் கூறியதாவது:–

காட்டுயானைகளின் வழிப்பாதை துண்டிக்கப்படுவதால் ஒரு இடத்திலேயே யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. எனவே காட்டு யானைகளின் வழித்தடங்களை கண்டறிந்து அவை கடந்து செல்லக்கூடிய வகையில் சாலை மற்றும் ரெயில் பாதை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்தில் வாளையாறு முதல் கஞ்சிகோடு வரை ரெயில் பாதையின் இருபுறமும் யானைகள் ரெயிலில் அடிபடாமல் இருக்க கேரள அரசு தடுப்பு வேலி அமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

தமிழக எல்லை வரை அமைக்கப்படுமா?

ஆனால் காட்டு யானைகள் நடமாட்டம் கஞ்சிகோட்டில் இருந்து தமிழகத்தின் போத்தனூர் வரை உள்ளது. எனவே போத்தனூர் வரை தடுப்பு வேலி அமைக்கப்படுமா? அல்லது கேரள எல்லை வரை மட்டுமே வேலி அமைக்கப்படுமா? என்று தெரியவில்லை. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்குமா? என்றும் தெரியவில்லை.

ரெயில் தண்டவாளத்திற்கு இரண்டு புறமும் அமைக்கப்படும் தடுப்பு வேலி சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாதது. கர்நாடக மாநிலம் பண்டிப்பூர் வன சரணாலயத்தில் காட்டு யானைகள் வெளியே வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அது போன்ற தடுப்பு வேலிகள் தான் அமைக்கப்படுகின்றன. அவற்றை காட்டு யானைகள் உடைத்துக் கொண்டு உள்ளே வர முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story