ஒரு சாவும், ஒரு பிறப்பும் கணவர் விபத்தில் இறந்த நாளில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது


ஒரு சாவும், ஒரு பிறப்பும் கணவர் விபத்தில் இறந்த நாளில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 23 July 2017 11:00 PM GMT (Updated: 23 July 2017 10:12 PM GMT)

கணவர் விபத்தில் இறந்த நாளில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

வசாய்,

கணவர் விபத்தில் இறந்த நாளில் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

நிறைமாத கர்ப்பிணி

விதியை நொந்து பயனில்லை என்பார்கள். அந்த விதி ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் துக்கத்தையும், சந்தோசத்தையும் கொடுத்துவிட்டது. அந்த பெண் துக்கத்தை மறந்து சந்தோசத்தில் திளைக்க முடியாத வாழ்நாள் துயரத்தையும் உண்டாக்கி விட்டது.

பால்கரை சேர்ந்தவர் கிரண்(வயது25). இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அந்த பெண் மன்மாடில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் தான் அந்த துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

விபத்தில் சாவு

சம்பவத்தன்று கிரண் தனது சரக்கு வேனில் வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சரக்கு வேனின் என்ஜின் திடீரென சூடானது. எனவே நந்தூர் கிராம பகுதியில் சரக்குவேனை நிறுத்திவிட்டு உள்ளே அமர்ந்து இருந்தார்.

அந்த நேரத்தில் அந்த வழியாக வசாய் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது மோதியது. இதில், கிரண் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி கிரணின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆண் குழந்தை பிறந்தது

இந்த பேரிடி செய்தியை கேட்ட அவர் கதறி அழுதார். குடும்பத்தினருடன் உடனடியாக பால்கருக்கு காரில் வந்து கொண்டிருந்தார். வாடா பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கிரணின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. உடனடியாக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சந்சோத்தை கொண்டாட முடியாத கனத்த வேதனையுடன் கிரணின் குடும்பத்தினர் அவருக்கு இறுதிச்சடங்கை செய்து முடித்தனர்.

கணவரின் முகத்தை கடைசியாக பார்த்து விட வேண்டும் என தவித்த கிரணின் மனைவிக்கு அந்த வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமல் போய்விட்டது.


Next Story