திருவொற்றியூரில் இடையூறாக இருந்த 160 வீடுகள் இடித்து அகற்றம் கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்


திருவொற்றியூரில் இடையூறாக இருந்த 160 வீடுகள் இடித்து அகற்றம் கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
x
தினத்தந்தி 25 July 2017 3:30 AM GMT (Updated: 24 July 2017 8:51 PM GMT)

திருவொற்றியூரில் புதிய வழித்தடத்தில் ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த 160 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

திருவொற்றியூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரெயில் மார்க்கத்தில் புதிதாக தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை உள்ள பகுதிகளில் தண்டவாளம் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள 360–க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்படும் என ரெயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அங்கு வசிப்பவர்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

வீடுகளை இழந்தவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் என்ற இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தாங்கள் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், வேறு இடத்துக்கு சென்றால் தங்கள் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், தங்களுக்கு அருகில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கி தரவேண்டும் எனக்கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று முதல் கட்டமாக தண்டவாளம் அமைக்கும் பணிக்காக, திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைகுப்பம் பகுதியில் உள்ள 160 வீடுகள் அகற்றும் பணி நடந்தது.

திருவொற்றியூர் தாசில்தார் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் இடையூறாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தாங்கள் வசித்து வந்த வீடுகள் அகற்றப்படுவதை பார்த்து சில பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சிலர் வீடுகளை விட்டு வெளியேற கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டனர்.

ஆனாலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி 160 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.


Next Story