

சென்னிமலை,
ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. நெசவு தொழிலாளி. அவருடைய மனைவி தங்கமணி. இவர்களுடைய மகன் விக்ரம் (வயது 13), மகள் பூஜா (6). இதில் விக்ரம் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். பூஜா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விக்ரம் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் உறவினர்கள் அவனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குணமடைந்த அவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினான்.
டெங்கு காய்ச்சலுக்கு சாவு
இந்த நிலையில் பூஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவளை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் பூஜாவுக்கு டெங்கு அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். ஆனால் குணமாகவில்லை. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தாள்.
இறந்த பூஜாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்கள்.