அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி: ரவுடியின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்து கொன்ற பயங்கரம்


அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி: ரவுடியின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்து கொன்ற பயங்கரம்
x
தினத்தந்தி 21 Nov 2017 11:30 PM GMT (Updated: 21 Nov 2017 10:19 PM GMT)

புதுவையில் அண்ணனை கொலை செய்த ரவுடியின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்து பழிக்குப்பழி வாங்கிய தம்பி உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). பிரபல ரவுடியான அவர் மீது தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதைத்தொடர்ந்து புதுவைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த இவர் கோவிந்தசாலை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நெய் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்த போது காரை மோதவிட்டு கொளஞ்சிநாதனை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி காரில் சென்ற அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது கொலையாளிகள் சென்ற கார் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தியது. இதனால் போலீசாருடன் சேர்ந்து பொதுமக்களும் விரட்டிச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்த மலைச்சாமி மகன் சேவற்கொடி, வைரம்பட்டி பண்ணமுத்து மகன் சிவா என்ற பரமசிவம் (25), கார் டிரைவரான நெல்மண்டி தெரு ராமச்சந்திரன் மகன் சேகர் (26) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களுடன் வந்தவர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையில் கொளஞ்சிநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதாவது கடந்த 2013–ம் ஆண்டு சேவற்கொடியின் அண்ணன் சுதாகர் என்பவரை கொளஞ்சிநாதன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். அதன்பின் ஜாமீனில் வந்த அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி குடும்பத்துடன் புதுவைக்கு இடம்பெயர்ந்தார்.

இந்தநிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த சுதாகரின் தம்பி சேவற்கொடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை வந்தார். தனது அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக கொளஞ்சிநாதனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

ஆனால் அவருக்கு கொளஞ்சிநாதன் இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த கொளஞ்சிநாதனை தனது ஆட்களைவிட்டு பின்தொடரச் செய்து ரகசியமாக அவரது இருப்பிடத்தை சேவற்கொடி அறிந்துள்ளார். இதன்பின் புதுவை வந்து கொளஞ்சிநாதனின் அன்றாட நடவடிக்கைகளை அவர்கள் நோட்டமிட்டு தெரிந்து கொண்டனர்.

இந்தநிலையில் கொளஞ்சிநாதனை கொலை செய்யும் திட்டத்துடன் சேவற்கொடியும், அவரது கூட்டாளிகளும் புதுவை வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் அறையை காலி செய்து விட்டு காரில் வந்து பட்டப்பகலில் கொளஞ்சிநாதனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான சேவற்கொடி, பரமசிவம், சேகர் ஆகியோரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story