ரெயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படுவதால் அல்லாடும் பொதுமக்கள்


ரெயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படுவதால் அல்லாடும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:00 PM GMT (Updated: 15 Dec 2017 7:00 PM GMT)

தண்டையார்பேட்டை–கொடுங்கையூர் பகுதிகளை இணைக்கும் சாலைகளில் உள்ள ரெயில்வே ‘கேட்’ அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராயபுரம்,

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வடசென்னை முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு குறுகிய சாலை, கன்டெய்னர் லாரிகள் போன்றவற்றால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது.

தற்போது மெட்ரோ ரெயிலுக்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.கே.நகர் பகுதியில் கொருக்குப்பேட்டை–எண்ணூர் நெடுஞ்சாலையிலும், கொருக்குப்பேட்டை–மணலி நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த 2 சாலைகளிலும் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் ரெயில்வே பணிமனையில் இருந்து வியாசர்பாடி ரெயில்வே பணிமனைக்கு செல்லும் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.

தண்டையார்பேட்டை பகுதியையும், கொடுங்கையூர் பகுதியையும் இணைக்கும் முக்கிய சாலைகளாக இந்த சாலைகள் அமைந்துள்ளன. ரெயில் என்ஜின்களும், சரக்கு ரெயில் பெட்டிகளும் அடிக்கடி சென்று வரும் சமயத்தில் இந்த சாலைகளில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

அவ்வாறு மூடப்படும் நேரங்களில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக இப்பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தரக்கோரி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

இதற்காக பொதுமக்கள் நடந்து சென்றுவர ஏதுவாக, கடந்த ஆண்டு கொடுங்கையூர் எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தமிழக அரசால் பக்கிங்காம் கால்வாயில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், ரெயில்வே கேட் மூடப்படும்போது, நடை மேம்பாலங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சென்று வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொருக்குப்பேட்டை–மணலி நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதேபோல் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

அவசரமாக செல்ல வேண்டும் என்ற காரணத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தண்டவாளம் வழியாக புகுந்து ரெயில் என்ஜின்கள், சரக்கு ரெயில்கள் வரும் போதே தண்டவாள பகுதியை ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.

பொதுமக்களின் அவசரம் கருதி போக்குவரத்து போலீசாரும், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாரும் இதை கண்டு கொள்வதில்லை. இதனால் தண்டவாளத்தை கடக்கும் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பகுதியில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கொருக்குப்பேட்டை பகுதியையும், வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

அதேபோல் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகேயும், கொருக்குப்பேட்டை–எண்ணூர் நெடுஞ்சாலையிலும், கொருக்குப்பேட்டை–மணலி நெடுஞ்சாலையிலும் ரெயில்வே மேம்பாலங்கள் அமைத்தால் இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.

இந்த திட்டங்கள் நிறைவேறினால் வடசென்னை பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Next Story