ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 36 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1,000 கோடி சிக்கியது


ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 36 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1,000 கோடி சிக்கியது
x
தினத்தந்தி 14 Dec 2016 11:55 PM GMT (Updated: 14 Dec 2016 11:55 PM GMT)

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 36 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் 36 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு

கருப்பு பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ஒழித்தார். இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி கருப்பு பணத்தை பறிமுதல் செய்து வருகிறது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.1,000 கோடி சிக்கியது

ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு பின்னர் நாடு முழுவதும் 36 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் சிக்கி உள்ளது. இதில் ரூ.20 கோடியே 22 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் தான் பெருந்தொகை சிக்கி உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் கணக்கில் வராத ரூ.29 கோடியே 86 லட்சமும், 41.6 கிலோ தங்க, வெள்ளி நகைகளும், 14 கிலோ மற்ற ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி வேட்டையில் பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்புரா அடுக்குமாடி குடியிருப்பில் கணக்கில் வராத ரூ.2 கோடியே 89 லட்சம் சிக்கியது. இதில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அடங்கும்.

கர்நாடகாவில் அதிகம்

இதேபோல் கோவா தலைநகர் பனாஜியில் நடந்த சோதனையில் ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். சண்டிகாரில் பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் ரூ.2 கோடியே 18 லட்சம் சிக்கியது. பெரும்பாலான வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் தான் பதிவாகி உள்ளன. இதுதொடர்பாக ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த வருமான வரி சோதனையில் ரூ.13 கோடியே 5 லட்சம் சிக்கியது. மற்ற இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story