ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைப்பு நிதி மசோதாவில் மத்திய அரசு திருத்தம்

ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பு ரூ.3 லட்சத்துக்கு பதிலாக ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டது. நிதி மசோதாவில் இதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
புதுடெல்லி,
வரி ஏய்ப்பை தடுப்பதற்காக, ரொக்கத்துக்கு பதிலாக, மின்னணு பண பரிமாற்ற முறைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரொக்க பரிமாற்றத்துக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது.
கடந்த பிப்ரவரி 1–ந் தேதி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ரூ.3 லட்சம் வரை ரொக்கமாக பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமற்ற பரிமாற்றமாக செய்ய வேண்டும் என்றும் அறிவித்தார். இந்த நடைமுறை, ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறினார்.
ரூ.2 லட்சமாக குறைப்புஇந்நிலையில், ரொக்க பரிமாற்றத்துக்கான உச்சவரம்பை ரூ.2 லட்சமாக குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று நிதி மசோதாவில் இதற்கான திருத்தத்தை கொண்டு வந்தது.
இதை மீறி, ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கத்துக்கு, அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்புநிதி மசோதாவில், ரொக்க பரிமாற்றத்துக்கான திருத்தம் மட்டுமின்றி, 40 சட்டங்களில் செய்ய வேண்டிய திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன. கம்பெனி சட்டம், வருங்கால வைப்புநிதி சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டன.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘இது பின்வாசல் வழியாக காரியம் சாதிக்கும் செயல்’ என்று அவர்கள் விமர்சித்தனர்.
ஆனால், அவர்களின் ஆட்சேபனையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார். ‘இந்த திருத்தங்களை நிதி மசோதாவின் அங்கமாக கருத முடியும்’ என்று அவர் கூறினார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் இந்த திருத்தங்களை ஆதரித்து பேசினார்.






