இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Dec 2025 11:22 AM IST
அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை - ஜி.கே. மணி பேட்டி
என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். ராமதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
- 15 Dec 2025 11:19 AM IST
விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் வரும் 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இந்தக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் தவெகவினர் கூறியுள்ளனர்.
- 15 Dec 2025 11:14 AM IST
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி தினகரன் பதில்
2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம். டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூட்டணி முடிவாகிவிடும் என எதிர்பார்த்தோம்; ஆனால் தள்ளிப்போகிறது; கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
- 15 Dec 2025 10:33 AM IST
அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் பிரபல நடிகை..!
‘குட் பேட் அக்லி’படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 64 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகையான ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 15 Dec 2025 9:54 AM IST
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Dec 2025 9:51 AM IST
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 15 Dec 2025 9:50 AM IST
திருவண்ணாமலை: மகா தீப மலையில் தீ வைத்த மர்ம நபர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் குறிப்பிட்ட பகுதியில் மர்ம நபர்கள் நேற்று தீ வைத்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. இதனால் அங்குள்ள ஏராளமான மூலிகை செடிகள், மரங்கள் எரிய தொடங்கின. தகவலறிந்த திருவண்ணாமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலையில் தீ வைத்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வனத்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 15 Dec 2025 9:49 AM IST
பாஜக வேட்பாளரிடம் தோல்வி: அதிர்ச்சியில் காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது. இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியை சேர்ந்த பெண் வேட்பாளர் சினி போட்டியிட்டார். இவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுவாதி 1,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
- 15 Dec 2025 9:47 AM IST
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
யூத மதத்தினரின் தீபத்திருநாள் பண்டிகையான ஹனுக்கா பண்டிகை 8 நாட்கள் நடைபெறும். இந்த பண்டிகையின் முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் யூதர்கள் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி பண்டிகையை கொண்டாடினர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சிட்னி நகரில் போண்டி கடற்கரை அருகே ஹனுக்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிட்னி பகுதியை சேர்ந்த ஏராளமான யூதர்கள் பங்கேற்றனர்.
ஹனுக்கா பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த இரு பயங்கரவாதிகள் அங்கு இருந்த யூதர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.















