பி.எஸ்.3 மாசு தரநிலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி


பி.எஸ்.3 மாசு தரநிலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி
x
தினத்தந்தி 30 March 2017 10:30 PM GMT (Updated: 30 March 2017 9:35 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பெருகி வரும் வாகன மாசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் மாசு தரம் பி.எஸ்.4 நெறிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் தயாரிக்குமாறு வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பழைய தரத்தில் அதாவது பி.எஸ்.3 மற்றும் 2–ன் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு 1–ந்தேதி (நாளை) முதல் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

ஆனால் பி.எஸ்.3 தரநிலையில் தயாரிக்கப்பட்ட 6.71 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தற்போதும் மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களிடம் இருப்பில் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் இந்த மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500–ம், பிரீமியம் பைக்குகளுக்கு ரூ.7500–ம், புதிய மாடல் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.5 ஆயிரமும் தள்ளுபடி அறிவித்து உள்ளது. இதைப்போல ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், அனைத்து விதமான பி.எஸ்.3 தரநிலை மோட்டார் சைக்கிள்களுக்கும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்து உள்ளது.

இந்த சலுகைகள் அனைத்தும் இருப்பு உள்ளவரை அல்லது இன்று வரை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story