ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து


ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
தினத்தந்தி 11 April 2017 5:15 AM IST (Updated: 11 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மெட்ரோ ரெயிலில் இருவரும் ஒன்றாக பயணம் செய்தனர்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் டெல்லிக்கு வந்தார். அவரை மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பின்னர், இந்தியா–ஆஸ்திரேலியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு பற்றிய ஒப்பந்தமும் அடங்கும்.

அந்த ஒப்பந்தத்தில், இரு நாட்டு உள்துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமரும் இணைந்து கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மோடி, ‘இருநாட்டு உறவின் ஒட்டுமொத்த அம்சம் பற்றியும் ஆய்வு செய்தோம். விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்தோம். இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஆர்வமாக இருக்கிறது’ என்று கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லும், கூடிய விரைவில் இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வோம் என்று உறுதிப்படுத்தினார்.

மெட்ரோ ரெயில் பயணம்

பின்னர், ஆஸ்திரேலிய பிரதமரும், பிரதமர் மோடியும் மெட்ரோ ரெயிலில் ஒன்றாக பயணம் செய்தனர். டெல்லி மண்டி ஹவுஸ் ரெயில் நிலையத்தில் ஏறிய அவர்கள், அக்‌ஷர்தாம் ரெயில் நிலையம்வரை மெட்ரோ ரெயிலில் சென்றனர். இவற்றுக்கு இடையிலான தூரம் 6.7 கி.மீ. ஆகும். அதை ரெயில் 15 நிமிட நேரத்தில் கடந்தது.

அந்த நேரத்தில், இரு பிரதமர்களும் சில சமயங்களில் நின்று கொண்டும், சில சமயங்களில் அமர்ந்து கொண்டும் பயணம் செய்தனர். அப்போது, இருவரும் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

அதை தங்களது ‘டுவிட்டர்’ பக்கத்தில் உடனுக்குடன் வெளியிட்டனர். 
1 More update

Next Story