10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது

பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
சண்டிகாரில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு கடந்த ஜூலை 18-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையத்து சிறுமியின் நலன் கருதி கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தரமான மருத்துவ வாரியத்தை அமைக்க வேண்டும், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வயிற்றில் வளரும் கருவை முன்கூட்டியே கலைக்க சிறந்த மருத்துவ வசதிகளுடன் வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு சரியான வழிமுறைகளை வகுக்கவேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இம்மனு தொடர்பாக கடந்த 24-ம் தேதி விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்து ஜூலை 26-ம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி சண்டிகார் பிஜிஐயில் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற போது, பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.
கருவை கலைப்பது என்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது கிடையாது என சிறுமி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை மேற்கொள்காட்டி சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. கருகலைப்பு செய்யப்பட்டால் சிறுமிக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சிறுமிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு திருப்தி தெரிவித்து உள்ளது. இதுபோன்ற வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டிற்கு வருவது என்பது நீண்ட தூர பாதையாகும்.
முன்னதாகவே கருகலைப்பு செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவ வாரியத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தனது கருத்தையும் பரிந்துரை செய்து உள்ளது.
Related Tags :
Next Story






