பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டது அருண் ஜெட்லி பேச்சு


பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டது அருண் ஜெட்லி பேச்சு
x
தினத்தந்தி 20 Aug 2017 11:00 PM GMT (Updated: 20 Aug 2017 9:22 PM GMT)

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மும்பை,

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது தடுக்கப்பட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு நிதி

பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிப்பு, கருப்பு பணப்புழக்கம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கியமான இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி பெறுவது தடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் ஷெலர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பேசியபோது அருண் ஜெட்லி இவ்வாறு குறிப்பிட்டார். அந்த கூட்டத்தில் ‘புதிய இந்தியா உறுதிமொழி’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் கூறியதாவது:–

கல்வீச்சு சம்பவம்

மத்தியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இதில் ஜி.எஸ்.டி. அமல், பணமதிப்பு நீக்கம், பினாமி பரிமாற்ற சட்டங்களில் திருத்தம், நேர்மையான முறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போன்றவை முக்கியமானவை ஆகும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கும் நிதியுதவி கிடைப்பது தடுக்கப்பட்டு உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன் காஷ்மீர் தெருக்களில் கல்வீச்சில் ஈடுபடுவோர் ஆயிரக்கணக்கில் கூடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் தற்போது 25 பேர் கூட இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.

கோரக்பூர் சம்பவம்

பொருளாதாரத்துக்கு வெளியே புழங்கி வந்த பணம் தற்போது வங்கி நடைமுறைக்குள் வந்துள்ளது. பாதுகாப்பு, ஊரக மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்காக நிதியை செலவிட நாங்கள் விரும்புகிறோம். உலகத்தரம் மிக்க பொது நிறுவனங்கள் நமக்கு வேண்டும். அப்போதுதான் கோரக்பூர் போன்ற அவமானகரமான துயரங்கள் (ஆக்சிஜன் கிடைக்காமல் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறந்த சம்பவம்) நடைபெறாமல் தடுக்க முடியும்.

7 முதல் 7.5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் மோடி அரசு திருப்தியடையவில்லை. இந்த வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, நாட்டு நலன் கருதி மத்திய அரசு மேற்கொண்டு வரும் கடுமையான முடிவுகள் தொடரும்.

படையினர் ஆதிக்கம்

பயங்கரவாதத்துக்கு கிடைத்து வரும் எல்லை தாண்டிய ஆதரவு மற்றும் நமது சொந்த குழுக்களின் ஆதரவு நடவடிக்கைகளால் காஷ்மீர் பிரச்சினை சிக்கலாகி உள்ளது. சில நேரங்களில், பயங்கரவாதிகளை தப்பிக்கச் செய்வதற்காக பெரிய அளவிலான போராட்டங்கள் மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

எனினும் மோடி அரசின் உறுதியான நடவடிக்கைகளால் காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story