ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்த முக்கிய சம்பவங்கள் விபரம்


ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்த முக்கிய சம்பவங்கள் விபரம்
x
தினத்தந்தி 21 Aug 2017 12:41 PM GMT (Updated: 21 Aug 2017 12:41 PM GMT)

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் மாதம் மறைந்த பின்னர் அதிமுகாவில் முன்னெப்போதும் இல்லா நாடகங்களை கண்டது.



 சென்னை,

சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா, கட்சியினர் இடையே எதிர்ப்பு, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தல் ரத்து, டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கம் மற்றும் இணைப்பு என அதிமுக பல்வேறு நகர்வுகளை சந்தித்தது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் நடைபெற்ற முக்கிய விபரங்கள் விபரம்:-
 
டிசம்பர் 5, 2016: 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கட்சியின் பொதுச்செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்  அடைந்தார். ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ஓ.பன்னீர்செல்வம் இரவோடு இரவாக முதல்-அமைச்சராக பதவியேற்றார். 

டிசம்பர் 29: அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக்கப்பட்டார். 

பிப்ரவரி 5, 2017: சசிகலா முதல்-அமைச்சராக பதவியேற்கும் வகையில் முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா அதிமுகவின் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கவர்னர் வித்யசாகர் ராவ் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார், ஆனால் புதிய முதல்-அமைச்சரை நியமனம் செய்யும் வரையில் பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார். 

பிப்ரவரி 7: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிர்ப்பை தெரிவித்தார். 

பிப்ரவரி 14: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவை சுப்ரீம் கோர்ட்டு குற்றவாளி என அறிவித்தது. பழனிசாமி அதிமுகவின் சட்டசபைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 19 உயர்மட்ட தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 16: எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக பதவியேற்றார்.

பிப்ரவரி 17: ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் எஸ். வெங்கடேஷை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். 

பிப்ரவரி 18: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிப்பெற்றது 122 வாக்குகளுடன். 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டது. சட்டசபையில் பெரும் களபரமே வெடித்தது.

மார்ச் 8: ஜெயலலிதா மறைவு தொடர்பாக விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 

மார்ச் 15: ஏப்ரல் 12-ல் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டார். 

மார்ச் 22: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக இடைக்கால உத்தரவை பிறப்பித்தது; இடைத்தேர்தலில் இரு அணியினரும் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை பயன்படுத்த முடியாது என கூறியது தேர்தல் ஆணையம்.

மார்ச் 23: பழனிச்சாமி அணிக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை வழங்கியது. அவருடைய அணி அதிமுக(அம்மா) என்ற பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் வழங்கப்பட்டது. அவருடைய அணி அதிமுக (புரட்சி தலைவி அம்மா) என பெயர் பெற்றது.

ஏப்ரல் 9: வாக்காளர்களை கவரும் வகையில் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்தது.

ஏப்ரல் 17: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

ஏப்ரல் 18: ஆட்சியில் இருந்த அதிமுக (அம்மா) அணியினர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தையை நடத்த குழுவை அறிவித்தது. பழனிச்சாமி அமைச்சரவை தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. டிடிவி தினகரன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து விலக்க முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 19: தேர்தல் ஆணைய லஞ்ச வழங்கில் டிடிவி தினகரன் ஆஜராக டெல்லி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியது.

ஏப்ரல் 20: சசிகலா மற்றும் தினகரனை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வலுவாக முன்வைத்ததும் இரு அணிகள் இணைப்பு முயற்சியானது தோல்வியில் முடிந்தது.

ஏப்ரல் 25: லஞ்ச வழக்கில் டிடிவி தினகரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

ஏப்ரல் 26: கட்சி தலைமையகத்தின் புனிதத்தை நிலைநாட்ட வேண்டும் என பன்னீர்செல்வம் அணி வலியுறுத்தியதை அடுத்து அதிமுக தலைமையகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் நீக்கப்பட்டது. 

மே 2: தேர்தல் ஆணைய லஞ்ச வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

மே 6: இரு அணிகள் இணைப்புக்கு ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையை பழனிச்சாமி அணி சந்தர்ப்பவாதம் என விமர்சனம் செய்தது.

மே 19: அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா அணியினர் பயன்படுத்த தடை விதிக்க பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.

ஜூன் 5: பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். 

ஜூன் 11: சசிகலா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவை ஓ.பன்னீர்செல்வம் அணி கலைத்தது.

ஆகஸ்ட் 10: டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என பழனிச்சாமி அணி கூறியதும் இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமானது.

ஆகஸ்ட் 17: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என பழனிச்சாமி அறிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்த வீடு  நினைவு  இல்லமாக்கப்படும் எனவும் அறிவித்தார். 

ஆகஸ்ட் 18: சசிகலாவை அவருடைய பிறந்த நாளில் பெங்களூரு சிறையில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இரு அணிகள் இடையிலான பேச்சுவார்த்தனையானது துரிதமாக நடந்தது, ஆனால் முடிவு எட்டப்படாமல் நீடித்தது.

ஆகஸ்ட் 19: பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் இரு அணிகள் இணைப்பு தொடர்பான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். 

ஆகஸ்ட் 21:- இரு அணிகளும் இணைந்தது.


Next Story