பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு?


பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு?
x
தினத்தந்தி 21 Oct 2017 10:45 PM GMT (Updated: 21 Oct 2017 8:50 PM GMT)

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

கருப்பு பணம், கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி அறிவித்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் ஒரேநாள் இரவில் செல்லாததாகி விட்டது.

இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த முடிவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இது ஒரு மாபெரும் தோல்வி திட்டம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வர்ணித்தார். இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசை சாடினார்.

அடுத்த மாதம் 8–ந்தேதியுடன் பணமதிப்பு நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த தினத்தை தேசிய துயர தினமாக அனுசரிக்க வேண்டும் என ஆந்திரா, அசாம், மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதை கட்சி மேலிடமும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. துயர தினம் அனுசரிப்பதன் மீதுள்ள நன்மை தீமைகள் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து விரைவில் தனது முடிவை கட்சி மேலிடம் அறிவிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதே நேரத்தில் கட்சி மேலிடம் அனுசரிக்காவிட்டாலும், மாநில தலைமை விரும்பினால் நவம்பர் 8–ந்தேதியை தேசிய துயர தினமாக அனுசரிக்கலாம் என்றும் அவை கூறியுள்ளன.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியது. நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தற்கொலை செய்து கொண்டனர். சமீப காலத்தில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்திய மத்திய அரசின் இந்த பொருளாதார கொள்கை முடிவால் ஏராளமானோர் அகால மரணமடைந்தனர்’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story