‘ராகுலை கிண்டல் செய்வது இனி வேலைக்கு ஆகாது’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சூடு


‘ராகுலை கிண்டல் செய்வது இனி வேலைக்கு ஆகாது’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் சூடு
x
தினத்தந்தி 22 Oct 2017 10:45 PM GMT (Updated: 22 Oct 2017 9:02 PM GMT)

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

புதுடெல்லி,

அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூட, ராகுல் காந்தி ‘டுவிட்’களுக்கு ரஷியா, கஜகஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மறுடுவிட் வருவதை கிண்டல் செய்து, ‘‘ஒரு வேளை ரஷியா, இந்தோனேசியா, கஜகஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ராகுல் காந்தி திட்டமிடுகிறாரா?’’ என கூறி இருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘கடந்த காலத்தில் ராகுல் காந்தியை பா. ஜனதா கட்சி மிகவும் வெற்றிகரமாக கிண்டல் செய்து வந்துள்ளது. இனி அதெல்லாம் வேலைக்கு ஆகாது. கடந்த சில மாதங்களாகவே இந்த கதையெல்லாம் மாறி வந்துள்ளது. காங்கிரசின் பின்னால் இன்னும் உத்வேகத்தை நீங்கள் இனி காண முடியும். பா. ஜனதாவுக்கு வலுவான போட்டியாளராக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார்’’ என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இப்போதே 2014 ஏப்ரல், மே மாதங்களில் இருந்ததை விட மக்கள் கணிப்பில் நாங்கள் உயரத்தொடங்கி விட்டோம். அதில் சந்தேகமே வேண்டாம்’’ என்றும் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிற போது கட்சிக்கு புதிய சக்தி பாய்ச்சப்படும் என்றும் சசி தரூர் தெரிவித்தார்.


Next Story