விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம்’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்


விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம்’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2017 11:45 PM GMT (Updated: 20 Feb 2017 9:27 PM GMT)

விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் கூறினார்.

சென்னை,

முதல்–அமைச்சர் சந்திப்பு

தமிழகத்தில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தலைமைச்செயலகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் அறையிலேயே எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய முதல் பேட்டியை தொடங்கினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்ததாவது:–

விரைவில் வறட்சி நிவாரணம்

கேள்வி:– விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் எப்போது வழங்கப்படும்?

பதில்:– குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும்.

கேள்வி:– விவசாயிகள் தற்கொலை செய்து வருவதாக செய்திகள் வருகின்றனவே?

பதில்:– இதுகுறித்து சட்டசபையில் விவாதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

தண்ணீர் பிரச்சினை

கேள்வி:–தண்ணீர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

பதில்:– முதல்–அமைச்சராக பதவி ஏற்ற உடன், அண்ணா நினைவிடத்தில் இதுகுறித்து அறிவித்து உள்ளேன். அதாவது, கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கிராமப்புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் போதிய அளவு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

மணல் விற்பனை

கேள்வி:– தண்ணீரை எங்கு இருந்து கொண்டுவர உள்ளீர்கள்?

பதில்:– இயற்கையை யாரும் வெல்ல முடியாது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு வருகிறது.

கேள்வி:– மணல் விற்பனையை நேரடியாகவே அரசே விற்பனை செய்யும் திட்டம் கொண்டுவரப்படுமா?

பதில்:– இதுகுறித்து ஏற்கனவே அறிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

முதல்–அமைச்சர் அறை

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமை செயலகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையையும், நாற்காலியையும் பயன்படுத்தவில்லை. மாறாக தன்னுடைய நிதி அமைச்சர் அறையிலேயே முதல்–அமைச்சர் பணியை மேற்கொண்டார். தற்போது தமிழக முதல்–அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகம் வந்த போது ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு, முதல்–அமைச்சர் பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story