புதிய வரிகள்-சலுகைகள் இல்லை: தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு

2017–2018–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை 10.30 மணிக்கு கூடியது.
சென்னை,
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு
பட்ஜெட் அடங்கிய சூட்கேசை அமைச்சர் ஜெயக்குமார் கையில் எடுத்து வந்தார். அதில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.
அவர்களை, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். சரியாக, காலை 10.33 மணிக்கு நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் உரையை தொடங்கினார்.
முதல் 3 நிமிடங்கள் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பற்றியும் பேசினார். சசிகலாவின் பெயரை அவர் குறிப்பிட்டபோது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய வரி விதிப்பு இல்லைஅதன்பின்னர், காலை 10.36 மணிக்கு, பட்ஜெட் உரையை டி.ஜெயக்குமார் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து, மதியம் 1.11 மணி வரை 100 பக்க பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இல்லை.
இருந்தாலும், பற்றாக்குறை பட்ஜெட்டாக அமைந்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,59,363 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினம் ரூ.1,75,293 கோடி இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும்.
வரிச்சலுகைகள் இல்லைமதிப்புக் கூட்டு வரி முறைக்குப் பதிலாக பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறை செயல்முறைக்கு வர உள்ளதால், வரிச்சலுகைகள் எதுவும் இந்த வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை.
வணிக வரிகளில் இருந்து பெறப்படும் வருவாய், 2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 66,522 கோடி ரூபாய் எனவும், 2017–2018–ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 77,234 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
2016–2017–ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 87,287 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், 2017–2018–ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 99,590 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 2017–2018–ம் ஆண்டில் 12,318 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
காவல் துறைக்கு ரூ.6,483 கோடி ஒதுக்கீடு* தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10,500 நபர்களை இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும்.
* காவல் துறைக்காக ரூ.6,483 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.253 கோடியும், சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.282 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது.
* கூடுதலாக 35 ஆயிரம் ஏக்கர் கரும்பு சாகுபடியை நுண்ணீர்ப் பாசன முறையின் கீழ் கொண்டு வரவும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை மேலும் 40 ஆயிரம் ஏக்கரில் விரிவுபடுத்துவதற்கும் இந்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
* ரூ.369 கோடி நிதி ஒதுக்கீட்டில், கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில், நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் ஒரு லட்சம் ஏக்கர் கூடுதலாக கொண்டு வரப்படும்.
* 115 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளும், 107 கிலோ மீட்டர் நீளமுள்ள மாவட்ட முக்கிய சாலைகளும் ரூ.160 கோடி செலவில் இந்த ஆண்டில் அகலப்படுத்தப்படும்.
* இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
* தமிழக அரசின் கடன் சுமை இந்த ஆண்டு ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடியாக உயரும். மேலும், பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன.






