முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மீது விசாரணை நடத்த ஊழல் தடுப்பு இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவு


முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மீது விசாரணை நடத்த ஊழல் தடுப்பு இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 27 May 2017 10:45 PM GMT (Updated: 27 May 2017 6:12 PM GMT)

முன்னாள் தலைமை செயலாளரும், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனருமான ராமமோகன ராவ் மீது விசாரணை நடத்துவதற்கு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் 21–ந் தேதியன்று அதிகாலையில் இருந்து சென்னை அண்ணாநகரில் இருக்கும் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவின் வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகனின் வீடு உள்பட பல இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

அன்று பிற்பகல் 2.20 மணிக்கு தலைமை செயலகத்துக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

ஆவணங்களின் அடிப்படையில்...

இந்த சோதனை குறித்து தமிழக அரசுக்கு தற்போது வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. அவர் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

சேகர்ரெட்டிக்கு சொந்தமான வளாகங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை குறியீடாக அந்த அறிக்கையில் வருமான வரித்துறையினர் குறிப்பிட்டு இருப்பதாக கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதுதொடர்பாக விசாரணையை தொடங்குவதற்கு அரசு தங்களை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி பூர்வாங்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு

மேலும் அந்த அதிகாரி, ‘‘கிடைத்துள்ள ஆவணங்களை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அதில் ஏதாவது ஆரம்பகட்ட குற்ற முகாந்திரம் காணப்பட்டால் வழக்கு பதிவு செய்வோம். இதற்கென்று தனிப் படையை அமைத்திருக்கிறோம். ராமமோகன ராவை இதுவரை நாங்கள் விசாரிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 1985–ம் ஆண்டில் ராமமோகன ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். தலைமைச் செயலாளர் பதவிக்கு வந்த அவர், வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சுமார் 3 மாதங்கள் எந்தப் பதவியிலும் நியமிக்கப்படாமல் இருந்த அவர், ஒரு சில மாதங்களுக்கு முன்பு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story