நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம்


நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம்
x
தினத்தந்தி 15 Aug 2017 11:45 PM GMT (Updated: 15 Aug 2017 5:56 PM GMT)

நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம் என்று சுதந்திர தின விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக அவர், மத்திய பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது கூறியதாவது:–

இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க அரசியல் அமைப்பு சட்டம் வழிவகை செய்கிறது. இருந்தபோதிலும் அடிப்படை உரிமைகளை பெறுவதில் பல்வேறு தடைகள் இருக்கின்றன.

இவற்றை களைந்து அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து பூர்த்தி செய்வோம். இதற்காக அனைவரும் சிறப்பாக பணியாற்றுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஐகோர்ட்டு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தலைமை நீதிபதி பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஐகோர்ட்டு நீதிபதிகள், அலுவலர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய வளாகத்தில் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

விழாவில் மாநில உறுப்பினர் பாஸ்கரன், பதிவாளர் பரமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story