ஜெயலலிதாவின் மரண மர்மங்களை மறைப்பதில் பா.ஜனதாவும் உடந்தையா?


ஜெயலலிதாவின் மரண மர்மங்களை மறைப்பதில் பா.ஜனதாவும் உடந்தையா?
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 8:50 PM GMT)

ஜெயலலிதாவின் மரண மர்மங்களை மறைப்பதில் பா.ஜனதாவும் உடந்தையாக உள்ளதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல்தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘மக்களுக்காகவும், கட்சித் தொண்டர்களுக்காகவும் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன’, என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே முன் வைத்துள்ளதையும், உள்நாட்டில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்படுவது போல, ‘பணபேரங்கள் துபாய் நாட்டில் நடந்துள்ளது’ என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வே குற்றம் சாட்டியிருப்பதும் அரங்கேறியுள்ளன.

மத்திய அரசின் சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மாயமானது போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் எதுவும் இன்று வரை வெளிப்படவில்லை. விசாரணை கமி‌ஷன் நியமனம் என்கிற கண்துடைப்பு அறிவிப்பு மட்டுமே வெளிவந்துள்ளது.

இன்னும் அதற்கு நீதிபதி யார்? என்றே தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சி.பி.ஐ. விசாரணை, பொறுப்பில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை என்பதையெல்லாம் ‘பதவி’ துண்டிற்காக வசதியாக மறந்து விட்டு, விசாரணை கமி‌ஷன் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இரு அணிகள் இணைப்பு என்று ஓ.பி.எஸ் நடத்தியுள்ள நாடகம் என்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை மட்டுமல்ல, அ.தி.மு.க. தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி பதவி வெறியின் உச்சத்தில் இருந்து கொண்டு அதை மறைப்பதற்கு தர்மயுத்தம் என்று மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண மர்மமும் விலகவில்லை. சசிகலா குடும்பத்தாரையும் அதிகாரபூர்வமாக நீக்கவில்லை. தர்மயுத்தம் என்ற பெயரில் நடந்த பதவி யுத்தத்தில் ஆட்சியிலும், கட்சியிலும் சுகமான இடங்களை பெற்றுக்கொண்டு ஜெயலலிதாவின் மரண மர்மத்தையும் ‘அம்போ’ என விட்டுவிட்டு, தர்மயுத்தம் என்ற தலைப்பையும் ‘ஒரு தாய் மக்கள்’ என மாற்றி, புது நடிப்பினை வெளிப்படுத்துகிறார்கள்.

தர்மயுத்தம், ஒருதாய் மக்கள் எனத் தலைப்புகள் மாறினாலும், டெல்லியில் இருந்து இயக்கப்படும் கயிறுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகள் நாங்கள் என்பதை அ.தி.மு.க.வின் இரு தரப்பினரும் அப்பட்டமாக நிரூபித்துவிட்டனர்.

திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றிய பெரியார் மண்ணில் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெறமுடியாது என்பதை நன்றாகவே அறிந்திருக்கும் பா.ஜனதாவினர், திராவிடத்தையும் அண்ணாவையும் போலியாக பெயரளவில் வைத்துள்ள இயக்கமான அ.தி.மு.க.வின் தலைமையிலான ஆட்சியைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாகத் தமிழகத்துக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள் என்பது இதன் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரிய வந்துள்ளது.

மக்களிடம் அம்பலமாக வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருடைய மரணம் ஆகியவற்றில் உள்ள மர்மங்கள் வெளிப்படவேண்டும் என தர்மயுத்தம் நடத்தியவர்கள், அந்த மர்மங்கள் வெளிப்படாமலேயே ஒருதாய் மக்களாகிவிட்டார்கள் என்றால், மரண மர்மங்களை மறைப்பதில் பா.ஜனதா அரசும் உடந்தையாக இருக்கிறதா? என்ற கேள்விக்கான விடை கிடைக்க வேண்டும். இங்கு நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளும், ஊழல் பணத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தண்ணீர் போல் வாரி இறைத்தது தொடர்பான நடவடிக்கைகளும் பா.ஜனதா அரசால் மூடி மறைக்கப்படுமா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.

உண்மைகளை நிரந்தரமாக புதைத்து விடமுடியாது. கமி‌ஷன் அடிப்படையில் கணக்குப்போட்டு போட்டு தமிழக அரசு கஜானாவை கொள்ளையடித்தவர்களும் தப்பிவிட முடியாது. மக்கள் விரோத அ.தி.மு.க. அரசு இப்போது தனது கட்சிக்காரர்களுக்கும் சேர்த்து நம்பிக்கை துரோகத்தை இழைத்துள்ளது. மெஜாரிட்டியை இழந்த இந்த ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு, ஜனநாயக வழியில் விரைவில் நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது. அப்போது கல்லறையில் புதைந்துள்ள உண்மைகளும், கஜானாவில் அடிக்கப்பட்ட கொள்ளைகளும் வெளிவரும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story