வெறுப்புப் பிரசாரம்: பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்


வெறுப்புப் பிரசாரம்: பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
x

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story