ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2024 1:35 AM GMT (Updated: 4 May 2024 1:42 AM GMT)

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டம், முதலீடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் படித்த இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தின் மீது கொண்ட மோகத்தால் அதில் கண்மூடித்தனமாக ஏராளமான பணத்தை இழந்து வருகின்றனர்.

போடி அருகே உள்ள ரங்கநாதபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தனவந்தன் (வயது 26). இவர், போடியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியா (23). இருவரும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கினார். நாளடைவில் அவருக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. அதில் ரூ.53 லட்சம் வரை முதலீடு செய்து தனவந்தன் இழந்ததாக கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினர். ஆனால் தனவந்தனால் பணத்தை திருப்பி தர முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தனவந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இரவு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தபோது தனவந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story