இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது


இந்திய செய்தியாளர்கள் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்தது
x
தினத்தந்தி 3 July 2017 5:44 AM GMT (Updated: 3 July 2017 5:44 AM GMT)

சிக்கிம் எல்லையில் பதட்டம் ஏற்பட்டு உள்ளநிலையில் இந்திய செய்தியாளர்களின் திபெத் பயணத்தை சீனா ரத்து செய்து உள்ளது.


பெய்ஜிங்,

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா–பூடான்–திபெத் எல்லை முச்சந்திப்பு டோக் லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து சீன ராணுவம் அடாவடியாக எல்லைக்குள் நுழைந்தது. 

இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் இந்தியா படைகளை திரும்ப பெற வேண்டும் என்றது சீனா. ஆனால் பேச்சுவார்த்தைக்கு தயார், பாதுகாப்பு படையை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என இந்தியா பதில் கூறிவிட்டது. இதனையடுத்து எல்லையில் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. எல்லையில் இந்தியா ராணுவத்தை குவித்து உள்ளது.

இந்நிலையில் இந்திய செய்தியாளர்களின் திபெத்திய பயணத்தை சீனா ரத்து செய்து உள்ளது. இந்திய செய்தியாளர்கள் 8 முதல் 15-ம் தேதி வரையில் திபெத் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. இப்போது பயணம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை சீன தூதரகம் செய்தியாளர்களுக்கு தெரிவித்து உள்ளது. இந்திய செய்தியாளர்கள் திபெத் பகுதிக்கு செல்ல ஒவ்வொரு வருடமும் சீன அமைப்புகள் ஸ்பான்சர் செய்து வருகிறது.

Next Story