எல்லையில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டு


எல்லையில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டு
x
தினத்தந்தி 26 July 2017 6:50 AM GMT (Updated: 26 July 2017 6:50 AM GMT)

எல்லையில் தங்களது பகுதியில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது.

சிக்கிம் மாநில எல்லையையொட்டி இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த பகுதியை டோகா லா என இந்தியாவும், டோகாலாம் என பூடானும், டோங்லாங் என சீனாவும் அழைக்கிறது. இந்த பகுதியில் 3 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என 2012–ம் ஆண்டு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை நடத்தி வருகிறது. இதற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சீனாவுக்கு கடிதம் எழுதியது. இதனால் அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்தியா–சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காக இந்தியா சார்பில் அஜித் தோவல் பங்கேற்கிறார். அப்போது, எல்லைப் பிரச்னை குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் எல்லையில் தங்களது பகுதியில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது.

எல்லைப் பிரச்சனை குறித்து சீன ஊடகங்களே எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், முதல்முறையாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங்யீ இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

"சிக்கிம் மாநில எல்லையில் எங்களது பகுதி என்று கூறிக்கொள்ளும் டோக்லாம் பகுதியில் இந்திய படைகள் ஊடுருவியிருக்கிறது. இதனை இந்திய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்றால், எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற வேண்டும்’ என வாங்யீ வலியுறுத்தியுள்ளார். 

Next Story