குற்றவாளியை போலீஸ் துரத்தியபோது நிகழ்ந்த கோர விபத்து.. கனடாவில் இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் பலி


குற்றவாளியை போலீஸ் துரத்தியபோது நிகழ்ந்த கோர விபத்து.. கனடாவில் இந்திய தம்பதி உள்ளிட்ட 4 பேர் பலி
x

சந்தேக நபர் சென்ற வாகனம் நெடுஞ்சாலையின் தவறான பாதையில் அதிவேகமாக சென்றதால், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

டொரன்டோ:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பாமன்வில்லே நகரில் உள்ள ஒரு மதுபானக் கடையில் கடந்த திங்கட்கிழமை கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் ஒரு சரக்கு வேனில் செல்வதை அறிந்த போலீசார் நபரை பிடிப்பதற்காக வாகனத்தில் துரத்தினர்.

அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401-ல் தவறான பாதையில் அதிவேகமாக சென்றது. போலீஸ் வாகனமும் அதே வேகத்தில் துரத்தியது. அப்போது, சரக்கு வேன், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில், ஒரு காரில் இருந்த இந்திய தம்பதி, அவர்களின் 3 மாத பேரக்குழந்தை மற்றும், சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து வந்திருந்த 60 வயது நபர், 55 வயது பெண் மற்றும் அவர்களின் 3 மாத பேரக்குழந்தை ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். குழந்தையின் பெற்றோரும் அதே காரில் பயணித்தனர். அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சரக்கு வாகனத்தில் பயணித்த மற்றொரு பயணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story