இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியாவின் ஆதிக்கம் சென்னையிலும் தொடருமா? கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்


இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியாவின் ஆதிக்கம் சென்னையிலும் தொடருமா? கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 16 Dec 2016 12:15 AM GMT (Updated: 15 Dec 2016 7:43 PM GMT)

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னையில் டெஸ்ட் அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகி

சென்னை,

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னையில் டெஸ்ட்

அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டும் இந்திய அணி சென்னையிலும் தனது ஆதிக்க கரத்தை விரித்து, எதிரணியை அடக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. சொந்த மண்ணில் கடந்த 17 டெஸ்டுகளில் தோல்வியே காணாத இந்திய அணி அந்த பெருமையை, புத்தாண்டுக்கும் இழுத்துச்செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் வியூகங்களை வகுத்துள்ளது.

கோலி–அஸ்வின்

நடப்பு தொடரில் கேப்டன் விராட் கோலி (640 ரன்), புஜாரா (385 ரன்), விஜய் (328 ரன்) ஆகியோரின் பேட்டிங்கும், அஸ்வின் (27 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (16 விக்கெட்) ஆகியோரின் சுழல் ஜாலமும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. ஜெயந்த் யாதவின் ஆல்–ரவுண்டர் திறமையும் (சதம் உள்பட 221 ரன், 9 விக்கெட்) பின்வரிசைக்கு பலம் சேர்ப்பதை மறுக்க முடியாது. இதே கூட்டணியின் ஒருங்கிணைப்பு தொடர்ந்தால் போதும். வார்தா புயல் பாணியில், இங்கிலாந்தை துவம்சம் செய்து விடலாம்.

1993–ம்ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றதே இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் சிறந்த செயல்படாக உள்ளது. இந்த முறை 4–0 என்ற கணக்கில் தொடரை சொந்தமாக்கினால், அது புதிய வரலாறாக அமையும்.

இந்த தொடரில் 640 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி சென்னை டெஸ்டில் 135 ரன்கள் எடுத்தால் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கரிடம் (774 ரன்) இருந்து தட்டிப்பறித்து விடுவார்.

முந்தைய டெஸ்டில் 235 ரன்கள் விளாசி சாதனை படைத்த கோலியின் ருத்ரதாண்டவம் சென்னையிலும் தொடருமா? உள்ளூர் நாயகன் அஸ்வின் மீண்டும் மாயாஜாலம் காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆண்டர்சன் கிடையாது

தோல்வியால் துவண்டு போய் உள்ள இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கணுக்கால் மற்றும் தோள்பட்டையில் வலியால் அவதிப்படுவதால் இந்த டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காயத்தால் கடந்த இரு டெஸ்டில் ஓய்வில் இருந்த ஸ்டூவர்ட் பிராட் ஆடுவாரா? என்பது சந்தேகமாக உள்ளது.

இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்கின் கேப்டன்ஷிப் மீது அந்த நாட்டு ஊடகத்தினர், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை தொடுத்து வருகிறார்கள். இந்த டெஸ்டில் ஜெயித்தால் கேப்டன் பதவி ஆபத்தில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம். ஆனால் அது லேசான காரியம் அல்ல என்பது அவருக்கு தெரியும். என்றாலும் இந்தியாவின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடுமையான நெருக்கடி கொடுக்க முயற்சிப்பார்கள்.

மைதானம் எப்படி?

வார்தா புயல் மற்றும் மழை காரணமாக இந்த மைதானத்தில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. அது இப்போது சரி செய்யப்பட்டு விட்டன. ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதத்தை காய வைக்க, நிலக்கரி தணல் பயன்படுத்தப்பட்டது. அனேகமாக ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம்.

சேப்பாக்கத்தில் இதுவரை 31 டெஸ்டுகளில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் 13–ல் வெற்றியும், 6–ல் தோல்வியும், 11–ல் டிராவும் கண்டுள்ளது. இன்னொரு டெஸ்ட் சமனில் (டை) முடிந்தது. இங்கிலாந்து அணி இங்கு 8 டெஸ்டில் விளையாடி 3–ல் வெற்றியும், 4–ல் தோல்வியும், ஒரு டிராவும் சந்தித்துள்ளது. இந்திய அணி 1999–ம்ஆண்டுக்கு பிறகு இங்கு தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: லோகேஷ் ராகுல், விஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது இஷாந்த் ஷர்மா.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (கேப்டன்), கீடான் ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டாவ்சன், ஸ்டூவர்ட் பிராட் அல்லது கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஜாக் பால்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story