இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 27-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Dec 2025 11:10 AM IST
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - ஈரோடு இடையே ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649/22650 ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி இந்த ரெயிலானது 1-ந்தேதி முதல் ஈரோட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, காலை 4.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 27 Dec 2025 10:18 AM IST
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ஒருகிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு பவுன் 1,04,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருவதால் இரு பொருளும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது.
- 27 Dec 2025 10:17 AM IST
அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 27 Dec 2025 9:36 AM IST
வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை... கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு..! ஒரு கிராம் ரூ.20 அதிகரித்து ரூ.274க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 27 Dec 2025 9:31 AM IST
2-வது இன்னிங்சிலும் சுருண்ட ஆஸ்திரேலியா... இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.
இன்று 2-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றும், ஆஸ்திரேலிய அணியினர், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் 132 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
- 27 Dec 2025 9:30 AM IST
பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும் - அன்புமணி பேட்டி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேசிக்கொண்டு இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம். இன்று கூட்டணி குறித்து எதுவும் பேச முடியாது. பெரிய கூட்டணி, பலமான கூட்டணி, மெகா கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
- 27 Dec 2025 9:29 AM IST
மலேசியாவில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் நடிகர் நேற்றே விஜய் மலேசியா சென்றுவிட்டார். அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. எனவே அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, க்ரிஷ், ஹரிசரண், திப்பு என பல பின்னணி பாடகர்களும், பாடகிகளும் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை மேடைகளில் பாடவிருக்கிறார்கள். வழக்கமாக, தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு டிரெண்டாகும். அந்த வகையில், இம்முறை விஜய் என்ன பேசுவார் என அவரது ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, விழா களைகட்டப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
- 27 Dec 2025 9:27 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல, வருகிற ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு ) ஆகிய தேதிகளிலும் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.











