ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 11:00 PM GMT (Updated: 17 Nov 2017 7:30 PM GMT)

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பராக டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

நீண்ட கவுரவமும், பாரம்பரியமும் கொண்ட ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பார்மில் இல்லாததால் பீட்டர் நெவில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மற்றொரு விக்கெட் கீப்பர் 32 வயதான டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு அவர் டெஸ்ட் போட்டியில் ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சரிவர ஆடாத மேத்யூ ரென்ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் ரன்கள் குவித்த கேமரூன் பான்கிராப்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். டேவிட் வார்னருடன் அவர் அறிமுக தொடக்க வீரராக களம் இறங்குவார். ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கும் இடம் கிடைக்கவில்லை.

13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சயேர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.

அணித்தேர்வு ஒரு சில முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ‘விக்கெட் கீப்பர் டிம் பெய்னை குழப்பத்தில் தேர்வு செய்துள்ளதாக நினைக்கிறேன். மாநில அணியில் கூட டிம் பெய்ன் முதல்தர கிரிக்கெட் கீப்பர் கிடையாது. அவரது தேர்வு, எதிரணிக்கு சாதகமான விஷயமாகும்’ என்று விமர்சித்து இருக்கிறார்.

Next Story