முதல் இன்னிங்சில் இலங்கை 294 ரன்கள் சேர்ப்பு: டிராவை நோக்கி கொல்கத்தா டெஸ்ட்


முதல் இன்னிங்சில் இலங்கை 294 ரன்கள் சேர்ப்பு: டிராவை நோக்கி கொல்கத்தா டெஸ்ட்
x
தினத்தந்தி 19 Nov 2017 9:10 PM GMT (Updated: 19 Nov 2017 9:10 PM GMT)

இந்தியா – இலங்கை இடையே கொல்கத்தாவில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது. 2–வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் தவான், ராகுல் அரைசதம் விளாசி பதிலடி கொடுத்தனர்.

கொல்கத்தா,

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழையால் கணிசமான ஓவர்கள் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 122 ரன்கள் அதிகமாகும்.

அடுத்து 122 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2–வது இன்னிங்சை விளையாடியது.

இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. லோகேஷ் ராகுல் 73 ரன்களுடனும் (113 பந்து, 8 பவுண்டரி), புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இதுவரை 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த டெஸ்ட் டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Next Story