வேறொரு பெண்ணுடன் தொடர்பு: என்னுடன் கணவரை சேர்த்து வையுங்கள்... போலீசாரிடம் கெஞ்சிய பெண்

கூடுதல் வரதட்சணை கேட்டு அபிஷாவை கணவர் சித்ரவதை செய்துள்ளார்.

Update: 2024-05-05 05:28 GMT

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிஷா (வயது 33). இவருக்கும் ஞாறான்விளை பாளையங்கெட்டி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த வாலிபர் ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு அபிஷாவை சித்ரவதை செய்தார். இதனால் அபிஷா தனது 3 குழந்தைகளுடன் தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அத்துடன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இதற்கிடையே கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவது அபிஷாக்கு தெரியவந்தது. இதையடுத்து அபிஷா தனது கணவர் வீட்டின் முன்பு 3 குழந்தைகளுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அபிஷாவிடம் விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் அபிஷா கூறும்போது, 'எனக்கும், பாளையங்கெட்டி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 2 குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளது. இதனால் குழந்தைகளை பராமரிக்க கூடுதலாக வரதட்சணை வேண்டும் என கேட்டு சித்ரவதை செய்ய தொடங்கினார்.

அத்துடன் வீட்டை விட்டு துரத்தினார். அதைத் தொடர்ந்து நான் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டி நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாக தகவல் கிடைத்தது. எனவே நான் எனது 3 குழந்தைகளுடன் கணவர் வீட்டு முன்பு வந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கணவருடன் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும்' என்று கெஞ்சினார்.

இதற்கிடையே கணவர் தலைமறைவானார். போலீசார் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அபிஷா தனது 3 குழந்தைகளுடன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு சென்று பேச்சு வார்த்தைக்காக காத்திருந்தார். ஆனால், கணவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள அபிஷாவின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்