யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

போலீசார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-04 18:16 GMT

கோவை,

காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் இன்று கைது செய்யப்பட்டார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். கோவைக்கு அழைத்து செல்லும்போது தாராபுரம் அருகே போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அதேவாகனத்தில் சவுக்கு சங்கர் கோவை அழைத்து வரப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளதாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை மே 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்