கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே


கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் -  மல்லிகார்ஜுன கார்கே
x
தினத்தந்தி 24 April 2024 9:40 AM GMT (Updated: 24 April 2024 10:43 AM GMT)

வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் செய்ததாகவும், அங்குள்ள வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார். ஆனால் கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்? வெற்றிப்பெறுவோம் என பா.ஜனதாவுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை பா.ஜனதாவில் சேர்க்கிறீர்கள்? அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவார்கள்.

நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே? அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார்.

விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? தற்போது மோடியின் கியாரண்டி என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி . வாக்குகளுக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் பிரதமர் மோடி விளையாடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story