

மும்பை,
நவிமும்பை நெரூலில் செயல்பட்டு வரும் ஆன்லைன் நிறுவனத்திற்கு பார்சலில் இருந்து பொருட்கள் திருட்டு போவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் ஆன்லைன் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த நிலேஷ் சிர்சாட் (வயது28) என்பவர் தான் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பார்சலில் இருந்து செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது. இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் நிலேஷ் சிர்சாட் தனது கூட்டாளியான ராஜூ (26) என்பவருடன் சேர்ந்து ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 28 செல்போன்களை திருடி விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் 2 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து திருடிய 16 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.